'சிவப்பு' திரை விமர்சனம்: இலங்கை தமிழ் அகதிகள் குறித்த நேர்மையான பதிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் அண்மைய ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை விவரிக்கும் படங்கள் ஓரளவு கணிசமாக வந்துள்ளன. அந்த வரிசையில் சத்ய சிவா எழுதி இயக்கியிருக்கும் `சிவப்பு`, தமிழக அகதி முகாம்களில் வாடும் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களையும் அவர்கள் உள்ளூர் அரசியல்வாதிகளின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுவதையும் தோலுறிக்கும் முயற்சி.
உள்ளுர் எம்.பிக்கு (செல்வா) 20 மாடி கட்டடம் ஒன்றைக் கட்டிக்கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறார் கோனார் (ராஜ்கிரண்). ஒரு விபத்தால் பல தொழிலாளர்கள் கட்ட வேலையை விட்டு நீங்கிவிட அவருக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். அப்போது அகதிகள் முகாமிலிருந்து கள்ளத் தோனி வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிக்க முயன்று ஏமாற்றப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகளை சந்திக்கிறார். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கட்டடப் பணிக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். அவர்கள் தக்க சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல உதவுவதாகவும் வாக்களிக்கிறார்.
கோனாரின் நம்பிக்கைக்குரிய உதவியாளன் பாண்டியன் (நவீன் சந்திரா) பார்வதி என்ற அகதியுடன் காதல்வயப்படுகிறான். அவளிடம் தவறாக நடந்துகொள்ளும் எஞ்ஜினியரைத் தாக்குகிறான்,. இதற்குப் பழிவாங்கும் நோக்கில் அகதிகள் கட்டடப் பணியில் ஈடுபட்டிருப்பதை அரசாங்கத்திடம் புகார் அளிக்கிறான். அகதிகள் மீண்டும் முகாமுக்கே இழுத்துச் செல்லப்படுகின்றனர்.
இதன் பிறகு பாண்டியன் - பார்வதி காதல் என்ன ஆனது? அதில் உள்ளூர் எம்.பியின் பங்கு என்ன? ஆகியவை மீதிக் கதையில் சொல்லப்பட்டிருக்கின்றன.
தாய் மண்ணில் அனைத்தையும் இழந்துவிட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ்நாட்டில் எதிர்கொள்ளும் அவலநிலையை கள்ளத்தன்மாகவாவது வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முனையும் பரிதாபத்தை மனதில் முள்போல் தைக்கும் விதத்தில் படைத்திருக்கிறார் இயக்குனர் சத்யசிவா. தமிழ் அகதிகள் மீது அவருக்கு இருக்கும் நேர்மையான அக்கறை படம் நெடுக வெளிப்படுவதே `சிவப்பு` படத்தை மனதின் ஆழத்தில் பதியவைத்துவிடுகிறது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றிப் பேசும் மற்ற படங்களைப் போல் அல்லாமல் இந்தப் படத்தில் நகைச்சுவை, காதல் உள்ளிட்ட வெகுஜென அம்சங்கள் நேர்த்தியாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் பொருத்தப்பட்டுள்ளன. நகைச்சுவைக் காட்சிகளுக்கும் நாயகன் - நாயகி இடையிலான மோதல் மற்றும் காதல் காட்சிகளுக்கும் அதிக நேரம் வழங்கப்பட்டிருக்கிறது, ஆனால் இதுவே படத்தின் குறையாகவும் அமைந்துவிடுகிறது. படம் சற்று நீளமாக இருப்பதாகவும் உணரச் செய்கிறது.
தமிழக அரசியலில் இலங்கை தமிழர் பிரச்சனையின் பங்கு மற்றும் அதை சுயநல அரசியல்வாதிகள் தங்கள் நலனுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் ஆகியவை துணிச்சலாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் படத்தில் எம்.பி எடுக்கும் முடிவு அது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பாம இருப்பது ஆகியவற்றை இன்னும் விரிவாகவும் நம்பகத்தன்மையுடனும் காட்சிபடுத்தியிருக்கலாம்.
அளவான கூர்மையான வசனங்கள் படத்தின் சிறப்பம்சங்களில் முக்கியமானது. இலங்கைத் தமிழர்கள் இலங்கை இன வன்முறையிலும் இங்கே அகதி முகாம்களிலும் சந்திக்கும் வேதனைகள் பெரும்பாலும் வசனங்களாலேயே விளக்கப்படுகின்றன. ஆனால் அவை நாடகத்தன்மை அடையாமல் சரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தொடக்கத்தில் இலங்கையில் தமிழர்களின் வரலாற்றை விவரிப்பது மற்றும் நீதிமன்ற இறுதிக் காட்சி வசனங்கள் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கவை.
நல்லவராக நடிப்பது ராஜ்கிரணுக்கு கைவந்த கலை ஆகிவிட்டது. இதில் தமிழ் இன உணர்வு பற்றிப் பேசும் வசனங்களில் நெகிழ்ச்சியையும் இறுதிக் காட்சியில் கோபத்தையும் சரியாகக் கொண்டுவந்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார். நவீன் சந்திரா நடிப்பில் குறையில்லை. இறுதிக் காட்சிக்கு முன் காவல்துறை அதிகாரியிடம் கதறி அழும்போது நடிப்புத் திறமை பளிச்சிடுகிறது. அப்பாவி இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக ரூபா மஞ்சரி சிறப்பாக நடித்திருக்கிறார். இனிமேலாவது அவருக்கு தமிழ்சினிமாவில் இதுபோன்ற சவாலான வேடங்கள் கிடைக்ககடவது. நீண்ட காலத்துக்குப் பிறகு தம்பி ராமையாவின் நகைச்சுவை அதிக இடங்களில் சிரிக்க வைக்கிறது. `பூ` ராமு, போஸ் வெங்கட், வினோதினி ஆகியோர் தங்கள் பாத்திரம் கோரும் பங்கை சரியாகத் தந்திருக்கிறார்கள். அடக்கி வாசிக்கும் வில்லனாக செல்வாவைப் பார்க்கப் புதுமையாக இருக்கிறது.
தேசிய விருது வென்ற மது அம்பாட்டின் ஒளிப்பதிவு படத்துக்கு பக்க பலம். கதைக்கருவின் சோகத்தன்மையை நிறுவ அவர் பயன்படுத்தியிருக்கும் நிறத் தேர்வு பாராட்டுக்குரியது. ரகுனந்தனின் பின்னணி இசை சரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடல்கள் பரவாயில்லை.
இலங்கைத் தமிழர்களின் துன்பங்கள் குறித்த நேர்மையான பதிவாக இருப்பதுடன் ரசிக்கத்தக்க நகைச்சுவை , காதல் போன்ற விஷயங்களும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கும் இந்தப் படத்தை குறைகளை மறந்து பார்த்துவிட்டு வரலாம்.
மதிப்பெண்- 2.5/5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments