சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார் ஜோதிகா: நடிகர் சிவகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. முதல்முறையாக பாலா இயக்கிய படம் ஒன்றை ஜோதிகா படம் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் 'நாச்சியார்' படத்தை இயக்கிய இயக்குனர் பாலாவுக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார் ஜோதிகாவின் மாமனாரும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார். பின்னர் இந்த படம் குறித்து அவர் கூறியதாவது:
பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் மனதை லேசாகவும், பாரமாகவும் மாற்றி மாற்றி ஆக்கி ஒரு பேலன்ஸ்டு திரைக்கதையை 100 நிமிட நேரத்தில் சொன்ன பாலாவின் கம்பேக்கை வாழ்த்தி வரவேற்போம். ஜிவி.பிரகாஷ் இனிமேல் துஷ்டப்பயல் கேரக்டர்களில் நடிக்க கூடாது. அந்தளவு அவரை ஒரு ஜென்டில்மேனாக நம் மனதில் குடியேற வைத்துவிட்டார் பாலா. அரசியாக நடித்த அந்த இளம் தேவதையை எங்கே கண்டுபிடித்தாரோ… ? அற்புதமான மொழி பேசும் கண்களும் அது காட்டும் பாவனைகளும்… அடடா…
நாச்சியார் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்த புதுமுகம் ஜோதிகாவுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பை தரவேண்டும். குழம்ப வேண்டாம். உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலிஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார்.
முதல் ஃப்ரேமில் தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்த இசைஞானி இளையராஜா கடைசி நொடிவரை அதை நிலைநாட்டி கதைக்களத்துக்குள் நம்மை வாழ வைத்தார் என்பதை மறக்கவே முடியாது. எத்தனையெத்தனை வர்ணஜாலங்களை அந்த மேதை தூவி இருக்கிறார். உயிர்நாடியே இசைதான்.
கள்ளமறியாத பிஞ்சு உள்ளங்களின் வெள்ளைமன காதலையும், ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் நம்பிக்கையையும், காதல் செய்யும்போது குழந்தைதனமான குறும்புகளையும், நேரில் காணும்போது கோபத்தை செல்லமாய் காட்டி காணாதபோது தவியாய் தவித்து, என்னவன் எங்கோ தவிக்கிறான் என்று உணரும் நேரம் திசையறியாத பயணத்தை அழுகையுடன் தொடங்கிய அரசியின் அன்பும்… அவளை ஒரு குழந்தையாக பரிவுடன் பார்த்து அவளுக்காக தன் ஊன்உயிர் அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்யும் காத்தவராயனையும் தமிழ் சினிமா லேசில் மறக்காது. கனமாக தொடங்கினாலும் நம்மை லேசாக்கி, புன்னகையுடனும் பெருமிதத்துடனும் வழியனுப்பி வைத்த பாலாவுக்கு கோடி நன்றிகள்…..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com