மார்ச் 18ல் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்!

  • IndiaGlitz, [Friday,February 25 2022]

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் மார்ச் 18ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண் காமராஜ் இயக்கத்தில் உருவான ’கனா’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்றது என்பதும் தற்போது இந்த பணிகள் முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனா முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்தப் படம் மார்ச் 18ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டங்கல், பிகே, பாகுபலி, மாம் உள்பட ஒரு சில குறிப்பிட்ட இந்திய திரைப்படங்களே சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் ’கனா’ திரைப்படமும் அந்த வரிசையில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.