ரெமோ - திரை விமர்சனம்

  • IndiaGlitz, [Friday,October 07 2016]

ரெமோ: சிவகார்த்திகேயனின் ரசிக்கத்தக்க புது முயற்சி

தொடர் வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் திரைவாழ்வில், மிக அதிக பட்ஜெட், பிரம்மாண்ட பிரமோஷன், முதல் முறையாக பெண் வேடத்தில் நடித்திருக்கும் புதுமை என பல்வேறு காரணங்களுக்காக மிக முக்கியமான படம். இந்தப் படத்தில் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை விமர்சனத்தைப் படித்து தெரிந்துகொள்வோம்.

சிவகார்த்திகேயன் (சிவகார்த்திகேயன்) நடிகனாக விரும்பும் வேலையில்லா இளைஞன். சினிமா ஹீரோ ஆகும் கனவில் இருப்பவன். காவ்யா (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண்ணைக் கண்டதும் காதல்வயப்படுகிறான்.

அவளிடம் காதலைச் சொல்லப் போகையில் அவளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. எனவே நடிகனாகும் முயற்சியில் நர்ஸ் வேஷம் போடுகிறான். ஆனால் அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் காவ்யாவுடன் நெருக்கமாகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவளிடம் நர்ஸ் ரெமோ ஆக அறிமுகமாகி அவள் மருத்துவராக பணியாற்றும் மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து தனது காதலியைக் கைப்பற்ற முயற்சிக்கிறான்.

சிவகார்த்திகேயனின் முயற்சிகள் கைகூடியதா என்பதே மீதிக் கதை.

படத்தின் ட்ரைலரைப் பார்த்து எப்படிப்பட்ட கதையை ஊகித்திருப்பமோ அதுவேதான் படத்தின் கதை. கதைக் கருவும் பெரும்பாலான காட்சிகளும் பல படங்களில் பார்த்தவற்றை சற்று புது பெயிண்ட் அடித்து கொடுத்ததுபோல் உள்ளன, கதையில் வலுவான அம்சம் எதுவும் இல்லை. திரைக்கதையில் எதிர்பாராத திருப்பங்கள் இல்லை. வித்தியாசமாக ஆச்சரியபடுத்தும் விதத்திலோ எந்தக் காட்சியும் இல்லை.

ஆனால் இவையெல்லாம் இல்லாமலே படம் பெருமளவில் சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இருக்கிறது. மிக சாதாரணமான கதையை குழப்பமில்லாமல் தெளிவாக ஃபீல்குட் தன்மையுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன். சிவகார்த்திகேயனின் ஸ்க்ரீன் பிரசென்ஸ், படம் நெடுகக் கலந்திருக்கும் அவர் பாணியிலான நகைச்சுவை, விரசமில்லாத வசனங்கள் மற்றும் காட்சிகள், பி.சி.ஸ்ரீராமின் அபாரமான ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை ஆகியவை இந்தப் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க படமாக மாற்ற உதவியிருக்கின்றன.

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', ரஜினி முருகன்' போல் இது முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமல்ல. ஆனால் இதுபோன்ற படத்துக்கு போதுமான அளவு நகைச்சுவையை இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சிவகார்த்திகேயன் வீட்டுக்கு திடீரென்று கீர்த்தி திடீரென்று வந்துவிடும் காட்சியில் தியேட்டர் சிரிப்பலையில் மூழ்குகிறது. நாயகனைப் பெண்ணாக இருப்பதும் அது தொடர்பான காட்சிகளும் படத்தின் நகைச்சுவை அம்சத்தைக் கூட்டியிருக்கிறது.

காதல் படத்தில் நாயகன் - நாயகி கெமிஸ்ட்ரி மிக முக்கியம் இந்த படத்தில் சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் இணை, நமக்கு மிகவும் தெரிந்த மிக அழகான இளம் காதல் ஜோடிபோல் இருப்பது படத்துக்கு கூடுதல் வலுவூட்டியுள்ளது.

படத்தில் வலுவான வில்லன் இல்லை, திருமணம் ஆகப்போகும் பெண்ணை நாயகன் காதலிக்கும்போது அவளுக்கு நிச்சியிக்கப்பட்ட ஆணைக் கொடியவனாகக் காண்பிக்கும் தமிழ் சினிமா ஃபார்முலா இதிலும் பின்பற்றப்படுகிறது.

சொல்லப்போனால் படத்தில் வலுவான பிரச்சனை (Crisis) என்பதே இல்லை . நாயகனுக்கு எளிதாக நர்ஸ் கெட்டப் பொருந்திவிடுகிறது. அவரைப் பெண் என்று எளிதாக நாயகி உட்பட அனைவரும் நம்பிவிடுகிறார்கள், அவருக்கு எளிதாக மருத்துவமனை வேலை கிடைத்துவிடுகிறது, நாயகியை தன் மீது காதல்வயப்பட வைப்பதிலும் அவருக்கு எந்த சவாலும் இல்லை.

தவிர வேலைவெட்டி இல்லாத நாயகன் காதலையும் புனிதப்படுத்துவதும் பெண்களால்அ அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று வசனங்கள் பேசுவதும் கேட்டு கேட்டு சளித்துப்போனவை. அவை இந்தப் படத்திலும் உள்ளன.

அனால் மேலே சொன்னதுபோல் இந்த திரைக்கதைக் குறைகள் நகைச்சுவை, நடிப்பு, தொழில்நுட்பத் தரம் ஆகியவற்றால் ஈடு செய்யப்படுகின்றன.

இதையெல்லாம் மீறி இந்த ஜாலியான படத்தில் சில ஆட்சேபத்துக்குரிய விஷயங்களும் இருக்கின்றன. நிச்சயமாகிவிட்ட பெண்ணின் மனதைத் திட்டமிட்டுக் குழப்பி (இந்த வார்த்தையை படத்தின் நாயகனே சொல்கிறார்) அவளது காதலைப் பெறுவது படத்தில் காதல் என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் நாயகன், 'சுயநலமாகப் பொய்சொல்கிறோமே' என்று ஃபீல் பண்ணும்போதும் அவரது அம்மா அதை நியாயப்படுத்துகிறார்.

தவிர திருமணமாகவிருக்கும் பெண்ணின் மனதை இத்தனை எளிதாக மாற்றிவிட முடியும் என்று காண்பிப்பது தமிழ் சினிமாவில் பார்த்துப் பார்த்துப் பழகிய யதார்த்ததுக்குப் பொருத்தமில்லாத விஷயம். பெண்களை சுய சிந்தனை இல்லாத ஆண்களால் எளிதில் ஆட்டிவைக்கப்படுபவர்களாக காண்பிப்பதும் சரியானதும் அல்ல. அதுவும் இந்தக் காலகட்டத்தில் இது போன்ற சித்தரிப்புகள் தொடர்வது சரியா என்று தமிழ் சினிமா இயக்குனர்களும் நாயகர்களும் யோசிக்க வேண்டும்.

இது சிவகார்த்திகேயன் படம் என்று சொல்லும் அளவுக்கு படத்தைத் தோளில் சுமந்திருக்கிறார் அவர். நகைச்சுவை மட்டுமல்லாமல் எமோஷனல் நடிப்பிலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் சிறப்பாக உழைத்திருக்கிறார். காதல் காட்சிகளில் அழகாகவும் அம்சமாகவும் பொருந்துகிறார். நடனத்தில் பல படிகள் முன்னேறியிருக்கிறார். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளில் மாஸ் பில்டப்பை கொஞ்சம் அதிகமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

ரெமோ என்ற நர்ஸாகவே சிவகார்த்திகேயனை மாற்றியிருக்கும் வீடா (Weta) மேக்கப் குழுவினருக்கு பெரும் பாராட்டுகள். அதற்கேற்ற வசன உச்சரிப்பு, உடல்மொழி, எக்ஸ்பிரஷன்கள்
ஆகியவற்றுக்காகவும் மெனக்கெட்டிருக்கிறார் சிவகா. ஆனால் வசன உச்சரிப்பில்தான் வலிந்து பெண் தன்மையை திணித்திருப்பதுபோல் தோன்றுகிறது.

கீர்த்தி சுரேஷ், பார்த்தவுடன் கிறங்கடிக்க வைக்கும் அழகி என்ற பாத்திரத்துக்கு சரியான பொருத்தமாக இருக்கிறார். நடிக்கத் தேவையான இடங்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் சில இடங்களில் ஓவர் எக்ஸ்பிரஷன்கள் கொடுத்திருக்கிறார். அவரது பாத்திரப்படைப்பும் வழக்கமான தமிழ் சினிமா நாயகி வேடம்தான் என்பதால் சுவாரஸ்யமாக ஒன்றும் இல்லை.

நாயகனின் அம்மாவாக சரண்யா, வழக்கம்போல் நகைச்சுவைக்குக் கைகொடுத்திருக்கிறார். அவ்வளவுதான். நாயகனின் நண்பர்களாக சதீஷ், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் கவுரவத் தோற்றம் ரசிக்கத்தக்கதாக உள்ளது.

அனிருத்தின் பின்னணி இசை காட்சிகளுடன் லாவகமாகப் பொருந்துகிறது. நர்ஸ் ரெமோவுக்கு தரப்பட்ட தீம் இசையும், மாஸ் காட்சிகளின் அதிரடி இசையும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பாடல்கள் இது போன்ற படங்களின் வழக்கமான டெம்ப்ளேட்டை பின்பற்றினாலும் கேட்க நன்றாக இருப்பதாலும் காட்சிபடுத்தப்பட்ட விதத்துக்காகவும் பாராட்டலாம்.

படத்தின் ஆகப் பெரிய பலம் பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. திரையில் அனைவரையும் அனைத்தையும் இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் இந்த மனிதரால் எப்படிக் காண்பிக்க முடிகிறது என்ற வியப்பைக் கட்டுபடுத்த முடியவில்லை. டி.முத்துராஜின் கலை இயக்கத்தில் சென்னையின் சாலைகளும் பேருந்துகளும் மேலும் அழகாகக் காட்சியளிக்கின்றன.

இவை அனைத்திலும் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா தரத்துக்காக மெனக்கெட்டு தாராளமாக செலவழித்திருக்கிறார் என்பது தெரிகிறது.

மொத்தத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பு மற்றும் நகைச்சுவை, பி.சி.ஸ்ரீராம், ஒளிப்பதிவு, ஃபீல்குட் தன்மை ஆகியவற்றுக்காக ரெமோ' படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

மதிப்பெண்:- 2.75/5

More News

விஜய் ஏன் எல்லோரையும் விட உயர்ந்தவர். கீர்த்திசுரேஷ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தில் அவருக்கு முதன்முதலாக ஜோடியாக நடித்து வரும் கீர்த்திசுரேஷ் படப்பிடிப்பின்போது விஜய்யுடனான அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெங்கட்பிரபுவுக்கு விஜய் கொடுத்த 'மங்காத்தா' விருந்து

அஜித்தின் கேரியரில் ஒரு முக்கியமான படம் என்றால் அது 'மங்காத்தா' என்று கூறினால் அது மிகையாகாது. இந்த படத்தை பார்த்தவுடன் ஆச்சரியம் அடைந்த இளையதளபதி விஜய்...

சன்னிலியோன் படத்தில் இணைந்த ரம்யா நம்பீசன்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடித்த 'ராகினி எம்.எம்.எஸ் 2' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி வட இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றது...

ரிலீசுக்கு முன்னர் 'ரெமோ'வுக்கு கிடைத்த நல்ல செய்தி

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ரெமோ'...

'பிரேமம்' இயக்குனருக்கு கிடைத்த பதவி உயர்வு

'நேரம்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், சமீபத்தில் வெளிவந்த 'பிரேமம்' படத்தின் மூலம்...