சிவகார்த்திகேயனின் அடுத்த பட தலைப்பு 'மோதி விளையாடு பாப்பா'

  • IndiaGlitz, [Wednesday,September 26 2018]

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் விரும்பும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த குறும்படத்திற்கு 'மோதி விளையாடு பாப்பா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் திரு இயக்கத்தில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் அமைந்துள்ள இந்த குறும்படம் 5 நிமிடங்கள் ஓடுகின்றது. இந்த குறும்படம் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகவிருப்பதாக இதன் தயாரிப்பாளர்கள் ராகினி மகேந்திரன் மற்றும் அரசி அருள் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த குறும்படம் குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பான நகரம். ஆனால் கடந்த சில நாட்களாக சென்னையில் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. எனவே பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் தயாரிக்க முடிவு செய்தோம். இந்த குறும்படம் குழந்தைகளிடம் சேர வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயனை அணுகினோம். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இந்த குறும்படத்தில் நடிப்பது தனது கடமை என்று கூறிய அவர் சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்து கொடுத்தார். அவர் மட்டுமின்றி இந்த படத்தில் பணிபுரிந்த பலர் சம்பளம் கேட்கவில்லை. சென்னை பள்ளி ஒன்றில் 40 குழந்தைகளுடன் படமாக்கப்பட்ட இந்த குறும்படம் விரைவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகவுள்ளது' என்று கூறினர்.