நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் உதவி!
Send us your feedback to audioarticles@vaarta.com
+2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் எம்பிபிஎஸ் படிக்க முடியாத நிலையில் உள்ள பல மாணவ மாணவிகளில் ஒருவர் சஹானா. தஞ்சையை சேர்ந்த இந்த மாணவி +2 தேர்வில் 600க்கு 424 மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைத்தால் நிச்சயம் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துவிடும் என்றே கருதப்பட்டது. இவருடைய மெடிக்கல் ஆசை குறித்த பேட்டி ஊடகம் ஒன்றில் வெளிவந்தவுடன் பலர் இந்த மாணவிக்கு உதவி செய்ய முன்வந்தனர். இவருடைய மின்சாரம் இல்லாத குடிசை வீட்டிற்கு மின் இணைப்பு தர உதவி செய்தார் தஞ்சை கலெக்டர்.
இந்த நிலையில் கஷ்டப்பட்டு நீட் தேர்வுக்கு படித்து தேர்வு எழுதிய சஹானாவுக்கு நேற்று வந்த நீட் தேர்வு முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர் எடுத்த மதிப்பெண் வெறும் 125 மட்டுமே. இதனால் மனமுடைந்து போன சஹானாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயனிடம் இருந்து போன் வந்துள்ளது.
நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் வருத்தப்பட வேண்டாம் என்றும், உடனே சென்னைக்கு கிளம்பி வரவும் என்றும், சென்னையில் ஒரு சிறப்பான நீட் கோச்சிங் சென்டரில் சேர்த்து அதற்கான செலவு, சென்னையில் தங்குவதற்கும் உணவுக்குமான செலவு அனைத்தையும் தானே பொறுப்பேற்பதாகவும், நீ டாக்டர் ஆகும் வரை மொத்த செலவும் என்னுடையது என்றும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த சஹானா தற்போது சென்னை கிளம்ப தயாராகியுள்ளார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளை வைத்து அரசியல் செய்யமால், சிவகார்த்திகேயனை போல் வசதி படைத்தவர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாணவிக்கு இதுபோன்று உதவி செய்தால் நீட் தேர்வால் தற்கொலை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று சமூகநல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments