ஒரே ஒரு பேட்டியை படித்துவிட்டு ஓடோடி போய் உதவி செய்த சிவகார்த்திகேயன்.. நெகிழும் இயக்குனர் மனைவி..!
- IndiaGlitz, [Tuesday,July 23 2024]
மறைந்த இயக்குனர் ராசுமதுரவன் மனைவி பேட்டி ஊடகத்தில் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பேட்டியை படித்து அவருடைய குடும்பத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ’பூமகள் ஊர்வலம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ராசு மதுரவன். அதன் பின் ’பாண்டி’ ’மாயாண்டி குடும்பத்தார்’ ’கோரிப்பாளையம்’ ’முத்துக்கு முத்தாக’ ’பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ போன்ற படங்களை இயக்கினார்.
இந்நிலையில் இயக்குனர் ராசு மதுரவன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் காலமான நிலையில் அவரது குடும்பம் வறுமையில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் ராசு மதுரவன் மனைவி மற்றும் மகள்களிடம் ஊடகம் ஒன்று பேட்டி எடுத்த நிலையில் இந்த பேட்டி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பேட்டியில் ராசு மதுரவன் மனைவி பவானி தங்களுக்காக எந்த திரையுலகினரும் உதவவில்லை என்றும் எனது கணவரின் படங்களில் நடித்தவர்கள் கூட ஒரு வார்த்தை எப்படி இருக்கிறீர்கள் என்று கூட கேட்கவில்லை என்றும் ஆதங்கமாக தெரிவித்து இருந்தார்.
மேலும் தனது மகள்களின் எதிர்காலத்தை நினைத்தால் தனக்கு பயமாக இருக்கிறது என்றும் அவர் கூறிய நிலையில் இந்த பேட்டியை படித்த நடிகர் சிவகார்த்திகேயன் உடனே அவருடைய மகள்களின் படிப்பு செலவுக்காக சுமார் ஒரு லட்ச ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்தி உள்ளதாக தெரிகிறது. அது மட்டும் இன்றி மேலும் சிலர் உதவி செய்துள்ளனர்.
இதனை அடுத்து ராசு மதுரவன் மனைவி பவானி கூறுகையில், ‘எனது கணவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை, அவரது படத்தில் கூட சிவகார்த்திகேயன் நடித்ததில்லை, ஆனாலும் இந்த பேட்டியை பார்த்து எங்களுக்கு உதவி செய்த அவருக்கு எனது நன்றி. அதே போல் மேலும் சிலர் உதவி செய்து வருகின்றனர், அவர்களுக்கும் எனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு பேட்டி இயக்குனர் ராசு மதுரவன் குடும்பத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றம் செய்துள்ளது பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.