இயக்குனர்களின் 'கனா'வை நனவாக்கிய சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' உள்பட ஒருசில படங்களை இயக்கிய பொன்ராம், 'வேல்முருகன் போர்வெல்' படத்தை இயக்கிய எம்பி கோபி ஆகிய இருவரும் உசிலம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் விழா ஒன்றை நடத்தினர். இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டன. இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியை சென்னைக்கு வரவழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது கையால் பரிசு வழங்கி அவர்களுக்கு மதிய விருந்தும் கொடுத்து கெளரவப்படுத்தினார்.

இதுகுறித்து இயக்குனர் பொன்ராம், எம்பி கோபி கூறியபோது, நாங்கள் படித்த அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விழா நடத்த வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை. அப்போதுதான் சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த 'கனா' படம் எங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. அந்த ஸ்பார்க்கில் எங்கள் ஊரில் கிரிக்கெட் மேட்ச் நடத்தலாம் என்று முடிவு எடுத்தோம்.

அதன் காரணமாக திரு.சிவகார்த்திகேயன் அவர்களிடம் நாங்கள் நடத்தும் கிரிக்கெட் விழாவிற்கு வருகை தருமாறு அன்போடு அழைத்தோம். அவர் படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் அவரால் இந்த விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினரை சென்னைக்கு வரவழைத்து தன் பொற்கரங்களால் விருதும் விருந்தும் கொடுத்து கௌரவப்படுத்தினார். இதற்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்' என்று கூறினர்.