தாத்தா சிவாஜியுடன் மோதும் பேரன் விக்ரம்பிரபு?

  • IndiaGlitz, [Wednesday,July 22 2015]

சிவாஜி குடும்பத்தின் கலை வாரீசான விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளைக்கார துரை ஆகிய ஐந்து படங்களும் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்த ஆறாவது படமான 'இது என்ன மாயம்' திரைப்படம் வரும் 31ஆம்தேதி ரிலீஸாகவுள்ளது.


பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபுவுடன் கீர்த்தி சுரெஷ், காவ்யா ஷெட்டி, நாசர், அம்பிகா, சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை ராதிகா சரத்குமாரின் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விக்ரம் பிரபுவின் தாத்தாவும், நடிகர் திலகம் என்று அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் பிதாமகனுமாகிய சிவாஜி கணேசன் நடித்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற திரைப்படமும் அதே 31ஆம் தேதி நவீன தொழில்நுட்ப முறையில் தயாராகி, ரீ ரிலிஸ் ஆகவுள்ளது.

நாம் இதுவரை வரலாற்றில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த, சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மனை நம் கண்முன்னே நிறுத்திய பெருமை இந்த படத்திற்கு உண்டு. சிவாஜிகணேசன் மற்றும் பிரபு ஆகிய இருவர் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீஸான வரலாறு தமிழ் சினிமாவில் ஏற்கனவே நிகழ்ந்தது உண்டு. இந்நிலையில் முதல்முறையாக சிவாஜியுடன் அவரது பேரனின் படம் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே தினத்தில் ஜெயம் ரவியின் சகலகலாவல்லவன், விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், விக்ராந்த் நடித்த தாக்க தாக்க' ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.