இரவோடு இரவாக மெரினாவில் இருந்த சிவாஜி சிலை அகற்றம்
- IndiaGlitz, [Thursday,August 03 2017]
சென்னை மெரீனாவில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டது.
சென்னை மெரீனா கடற்கரையில் காமராஜர் சாலையில் சிவாஜி கணேசனுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து, சிலையை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அப்போது தமிழக அரசின் தரப்பில் 'சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு கொண்டிருப்பதாகவும், கட்டி முடித்தவுடன் மெரீனாவில் உள்ள சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சிவாஜி சிலை மெரீனாவில் இருந்து அகற்றப்பட்டது. விரைவில் சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறக்கப்படவுள்ளதை அடுத்து, அகற்றப்பட்ட சிவாஜி சிலை அங்கு நிறுவப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் சிவாஜி சிலை அகற்றப்பட்டதற்கு சிவாஜி மன்றத்தினர்களும், பல்வேறு அரசியல் கட்சியினர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.