பழைய 'விக்ரம்' படத்திற்கு சிவாஜி கணேசன் செய்த உதவி: பிரபல ஒளிப்பதிவாளர் தகவல்!
- IndiaGlitz, [Wednesday,June 15 2022]
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் கடந்த 1986ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வித்தியாசமான படமாக அமைந்தது என ரசிகர்களால் பேசப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ‘விக்ரம்’ படத்தை பார்த்த பழம்பெரும் ஒளிப்பதிவாளர் ரங்கா, கமல் நடித்த பழைய ‘விக்ரம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பழைய ‘விக்ரம்’ படத்தில் பணிபுரிந்த தனது அனுபவங்களை ஒளிப்பதிவாளர் ரங்கா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். ‘விக்ரம்’ படத்தில் எனக்கு ஒளிப்பதிவாளராக வாய்ப்பு கிடைக்க இயக்குனர் ராஜசேகர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தான் காரணம் என்றும் அந்த காலத்திலேயே ராக்கெட், சாட்டிலைட் என வித்தியாசமான கதை பின்னணியில் அமைந்த பெரிய பட்ஜெட் படமாக அது அமைந்தது என்றும் கூறினார்.
மேலும் ‘விக்ரம்’ படத்தில் வரும் ராக்கெட்டை திருவான்மியூரில் உள்ள ஒரு இன்ஜினியர் தான் தயாரித்து கொடுத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தின் ஒரு காட்சியில் அம்பிகாவை வில்லன் சுட்டுக்கொல்லும் காட்சியின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் இருந்த ரைபிளின் லென்ஸை வாங்கி படமாக்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பழைய ‘விக்ரம்’ படத்திற்கு துப்பாக்கியின் லென்ஸை சிவாஜிகணேசன் கொடுத்து உதவியது போல சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்திற்கு தனது சொந்த துப்பாக்கியை கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்கு கொடுத்து உதவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.