சிவாஜி மகள்கள் தொடர்ந்த வழக்கு: சாந்தி தியேட்டரும் வழக்கில் இணைப்பா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள்கள் சொத்துக்கள் குறித்து தொடர்ந்த வழக்கில் சாந்தி தியேட்டரையும் இணைக்க புதிய மனு கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சமீபத்தில் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் சொத்தில் தங்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாகவும் சொத்துக்களை உரிய முறையில் பிரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது சாந்தி தியேட்டர் பங்குகள் மற்றும் அதன் சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கையில் பிரபு மற்றும் ராம்குமார் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த சொத்தை விற்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சாந்தி மற்றும் ராஜ்வி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாந்தி திரையரங்கு வளாகத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம், பிரபு மற்றும் ராம்குமார் ஈடுபடுவதாகவும் இந்த வழக்கு முடியும் வரை விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.

ஆனால் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சாந்தி தியேட்டர் விற்பனை நடைமுறைகள் ஏற்கனவே முடிந்துவிட்டது என்றும் அதன் பிறகுதான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார்.

அதேபோல் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் 2010 ஆம் ஆண்டிலேயே சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் கைமாறிவிட்டதாகவும் கட்டுமான பணிகள் முடிந்த பிறகு தற்போது வழக்குப் பதிவு செய்திருப்பதால் விற்பனை செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும் வாதாடினர்.

இந்த நிலையில் அனைத்து வாதங்களையும் கேட்ட பிறகு இந்த வழக்கின் பிரதான வழக்கையும் சாந்தி திரையரங்கு சொத்துக்களை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.