தாமதமாகும் 'அண்ணாத்த': சிறுத்தை சிவா எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாமதம் ஆகும் என்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா அதிரடி முடிவு எடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. அப்போது திடீரென படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து படக்குழுவினர்களின் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்களுக்கும் திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து இன்னும் ஒருசில மாதங்கள் படப்பிடிப்பும் நடைபெறாது என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, சூர்யா நடிக்க இருக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் ஒரு படத்தை இயக்க சிறுத்தை சிவா ஒப்புக்கொண்டிருந்தார். அந்த படத்தின் பணிகளை தொடங்க இருந்த நேரத்தில் தான் ரஜினி படத்திற்கான அழைப்பு வந்ததும் ‘அண்ணாத்த’ படத்திற்கு அவர் சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்கள் தாமதம் ஆகும் என்பதால் அவர் சூர்யாவின் படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் விரைவில் சிவா-சூர்யா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.