மத்திய பட்ஜெட்டில் திரையுலகினர்களுக்கான மிகபெரிய சலுகை

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திரைத்துறையினர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அதாவது அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் இனிமேல் நேரடியாக எந்த இடங்களுக்கும் திரையுலகினர் சென்றூ அனுமதி கோரி காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சுலபமாக நடைபெற இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை அனுமதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை இதுவரை வெளிநாட்டு படப்பிடிப்பு குழுவினர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்திய திரைத்துறையினர்களுக்கும் கிடைத்துள்ளது.

அதேபோல் திரையுலகினர்களை அச்சுறுத்தி வரும் வீடியோ பைரசியை தடுக்கும் சட்டமும் இயற்றப்படும் என புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி இனி இணையதளங்களில் திருட்டுத்தனமாக படங்களை பதிவேற்றுவது, திருட்டு டிவிடி ஆகியவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.