வாகனங்களில் தனியாகச் செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டுமா??? சுகாதாரத்துறை விளக்கம்!!!
- IndiaGlitz, [Friday,September 04 2020]
கார், இருசக்கரம், சைக்கிள் போன்ற வாகனங்களில் தனியாகச் செல்வோர் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லவேண்டுமா என்ற கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷான் விளக்கம் அளித்து உள்ளார். அதில் ‘யாரேனும் ஒருவர் காரில் தனியாகச் செல்லும்போதோ, சைக்கிள், இருசக்கர வாகனங்களில் தனியாகச் செல்லும்போதோ, முகக்கவசம் அணிய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்படவில்லை” எனத் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மட்டும் நாளொன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 50% அதிகரித்துக் காணப்படுவதாகச் மத்தியச் சுகாதாரத்துறை தகவல் கொடுத்துள்ளது. அதேபோல கர்நாடகத்தில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 9.6% என்ற அளவிற்கு அதிகரித்துக் காணப்படுவதாகவும் மத்தியச் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பவர்கள் 10 லட்சத்துக்கு 49 என்ற அளவில்தான் இருக்கின்றனர். மேலும் பாதிப்பு எண்ணிக்கையும் 10 லட்சத்துக்கு 2,792 என்ற அளவிலே இருக்கிறது. இந்த எண்ணிக்கை உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்றும் ராஜேஷ் பூஷான் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். ஆனாலும் இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதை சில சமூகநல ஆர்வலர்கள் மிகவும் அச்சத்துடனே அணுகுகின்றனர். காரணம் ஊரடங்கின் பெரும்பாலான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் பரபரப்புடன் வெளிவந்தாலும் இறுதிக் கட்டத்தைத் தாண்டி பொதுபயன்பாட்டுக்கு இன்னும் கொண்டுவரப் படவில்லை. இதனால் மேலும் பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தனிநபர் பாதுகாப்பு, சமூக இடைவெளி, மாஸ்க் போன்றவற்றை மட்டுமே இதுவரை ஒரே தீர்வாக இருந்து வருகிறது. இந்நிலையில் வாகனங்களில் தனியாக செல்வோர் மாஸ்க் அணியத் தேவையில்லை என்று மத்திய அமைச்சகத்தின் செயலாளர் தெளிவுப் படுத்தியிருக்கிறார்.