பிரபல பழம்பெரும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்! திரையுலகினர் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,February 04 2023]

பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீரென காலமானதாக வெளியான செய்தி இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் உள்பட 19 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடலை பாடிய வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் திடீரென மயக்கமானதாகவும், இதனை அடுத்து அவரது காலமானதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

’ஏழு ஸ்வரங்களில் கான சரஸ்வதி’ என்று அழைக்கப்படும் வாணி ஜெயராம் ’தமிழில் மல்லிகை என் மன்னன் மயங்கும்’ ’ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்’ ’ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்’’ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ உள்ளிட்ட பல பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வாணி ஜெயராம் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அந்த விருதை அவர் வாங்குவதற்கு முன்பாகவே காலமானது இசை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் பிறந்து வளர்ந்து உலகம் முழுக்க பல கச்சேரிகள் செய்து புகழ் பெற்றவர் வாணி ஜெயராம். 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களை பாடியுள்ள இவர் நான்கு தலைமுறை இசை ரசிகர்களை மகிழ்வித்தவர். வாணி ஜெயராம் மறைவிற்கு இசை ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.