ரூ.2 கோடி வரை என்னிடம் பேரம் பேசப்பட்டது: சாத்தான்குளம் சம்பவம் குறித்து சுசித்ரா திடுக்கிடும் தகவல்
- IndiaGlitz, [Friday,July 03 2020]
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்த செய்தி முதலில் சாதாரணமாகத்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால் பாடகி சுசித்ரா இந்த மரணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலர் கொந்தளிப்பு எழுவதற்கு சுசித்ராவின் இந்த வீடியோ காரணம் என்பதும், குறிப்பாக அனைவருக்கும் புரியும் வகையில் அவர் ஆங்கிலத்தில் இந்த சம்பவம் குறித்து விரிவாக கூறியதும் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பிபிசி உள்பட பல சர்வதேச ஊடகங்களும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் காரணம் சுசித்ராவின் இந்த வீடியோ தான் என்று கூறப்படுகிறது. சுசித்ராவுக்கு பின்னர்தான் கோலிவுட் திரையுலகில் உள்ள பலரும் இந்த மரணம் குறித்து தங்களது கண்டனக் குரல்களை எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சியின்போது இதேபோன்று ஒரு போலீஸ் அராஜகம் குறித்த சம்பவம் நடந்தபோது என்னிடம் ஒரு வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தனக்கு ரூபாய் 2 கோடி வரை பேரம் பேசப்பட்டது என சுசித்ரா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர்கள் ஒரு அரசியல் பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுசித்ராவிடம் பேரம் பேசியவர்கள் யார் என்பது குறித்த தகவலை சுசித்திரா வெளியிட வேண்டும் என்று நெட்டிசன்கள் அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கையை ஏற்று சுசித்ரா தன்னிடம் பேரம் பேசியவர்கள் யார் என்பதை தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Been offered 2C to put up a video highlighting police atrocities in an earlier regime (when the opposition was in power) and lost sleep ever since. This is the lowest I’ve seen humanity dip. But not lower than the #sathankulam incident. Keep the focus #JusticeforJayarajAndFenix
— Suchitra (@suchi_mirchi) July 1, 2020