நாங்கள் கொடுத்த புகார் என்ன ஆயிற்று? காசி வழக்கை சுட்டிக்காட்டி சின்மயி கேள்வி

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞன் தன்னை தொழிலதிபர் என்று கூறிக் கொண்டும் வழக்கறிஞர் என்று கூறிக் கொண்டும் விமான ஓட்டுநர் பயிற்சியாளர் என்று கூறி, பல பெண்களை ஏமாற்றி அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காசி கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி நாகர்கோவிலைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரும் கல்லூரி மாணவிகள் சிலரும் காசி மீது பாலியல் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காசி மீது அதிகமான புகார்கள் குவிந்ததை அடுத்து அவர் மீது போஸ்கோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாடகி சின்மயி தனது சமூக வலைப்பக்கத்தில் இதுகுறித்து கூறிய போது ’சைபர் குற்றங்கள் மட்டுமே கவனிக்க முடியும் என்றால் ஒரு சில ஆண்கள் எங்களுக்கு எதிராக ஆபாசமாக பேசியும் ஆபாச புகைப்படங்களை அனுப்பியது குறித்தும் நாங்கள் கொடுத்த புகார் என்ன ஆயிற்று? என்று கேட்டுள்ளார். சின்மயி இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.