ஒரு பாலியல் குற்றவாளியை முதல்வர், வீட்டுக்கு சென்று வாழ்த்துவதா? சின்மயி ஆவேசம்..!

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருடைய வீட்டுக்கு சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அது மட்டும் இன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வைரமுத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வைரமுத்துக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்ததை பார்த்து ஆவேசமான சின்மயி தனது சமூக வலைத்தளத்தில் காரசாரமாக பதிவு செய்துள்ளார். ’பாலியல் கொடுமைக்கு பல பெண்களை ஆளாக்கிய ஒரு நபரின் பிறந்தநாளுக்கு முதல்வர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பல விருதுகள் பெற்ற பாடகி, டப்பிங் கலைஞரான நான், மீடூ இயக்கத்தின் பெயரில் இதே நபர் மீது பாலியல் புகார் தெரிவித்தேன். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பணியாற்ற முடியாத வகையில் பல்வேறு தடைகளை எதிர் கொண்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது, பல ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த இந்த கவிஞர் எந்த பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அரசியல்வாதிகளுடன் குறிப்பாக திமுகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தால் பல பெண்களை அவர் மிரட்டியுள்ளார். பத்ம விருதுகள், சாகித்ய அகாடமி விருது, பல தேசிய விருதுகள் பெற்றுள்ள இந்த மனுஷனுக்கு இருக்கும் சக்திதான் இது.

ஒரு பெண்ணுக்கு பாலியல் குற்றம் நடந்தால் ஏன் அதை முன் பேசவில்லை என்று கேட்கிறார்கள், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்புக்காக பேசுவதாக கூறுவது அவமானம். வைரமுத்துவைப் பற்றி பேச்சு எழும் போதெல்லாம் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.

இந்த மண்ணில் ஒரு அற்புதமான கலாச்சாரம் உள்ளது, அதுதான் பாலியல் மன்னிப்பு கலாச்சாரம். பாலியல் குற்றவாளிகளை இந்த மண்ணில் தான் கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எதிராக பேசும் பெண்களை துன்புறுத்துகிறார்கள், பிரிஜ்பூஷண் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் இவர்கள் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்’ என சின்மயி ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.