கொரோனா தாக்கியதால் சுவை, வாசனை திறனை இழந்த பிரபல பாடகர்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Wednesday,March 25 2020]
உலகமெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கொரோனா வைரஸ் ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் பிரபல பாடகர் ஒருவருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அவர் சுவை மற்றும் வாசனைத்திறனை இழந்துவிட்டதாகவும் வெளிவந்துள்ள தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள அமெரிக்க பாப் பாடகர் ஆரோன் ட்வீட். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது; ஹாய் நண்பர்களே. எனக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.
அதிர்ஷ்டவசமாக எனக்கு மிகவும் லேசான அறிகுறிகளே தென்பட்டன. காய்ச்சல் இல்லை. ஆனால் சளி இருக்கிறது. ஆனால், பலருக்கு மிகவும் தீவிரமான அறிகுறிகள் ஏற்படுவதாக அறிகிறேன். இது மிகவும் ஆபத்தான வைரஸ். வாசனைத் திறன் மற்றும் சுவையை இழந்துவிட்டதாக உணர்கிறேன். கடந்த திங்கள்கிழமை பரிசோதனை முடிவுகள் வந்தன. இந்த சூழலை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள இருக்கிறேன். இந்த வைரஸ் யாரை வேண்டுமானால் தாக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்''.
இவ்வாறு ஆரோன் ட்வீட் கூறியுள்ளார்.