மியூட்டில் வைத்து பாடம் நடத்திய அப்பாவி ஆசிரியர்! அவர் கொடுத்த வைரல் ரியாக்ஷன்ஸ்!
- IndiaGlitz, [Wednesday,February 10 2021]
கொரோனா தாக்கத்தால் பள்ளி, கல்லூரிகளின் இயல்பு நிலையே முற்றிலும் மாறிவிட்டது. இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போது ஆன்லைனில்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படி நடக்கும் பல வகுப்புகளில் மாணவர்கள் தூங்கி வழிவது, தொழில்நுட்பக் கோளாறு என சுவாரசியச் சம்பவங்களுக்கும் பஞ்சம் இருப்பது இல்லை.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைக் கழகத்தில் (NUS) கணிதப் பேராசிரியராக இருந்துவரும் டோங் வாங் எனும் பேராசிரியர் தன்னுடைய மாணவர்களுக்கு ஆன்லைனில் 2 மணி நேரமா பாடம் நடத்தி இருக்கிறார். அவர் நடத்திய பாடத்தில் எந்த குறையும் இல்லை. ஆனால் அவர் நடத்திய பாடத்தைத்தான் மாணவர்கள் கேட்க முடியாதவாறு மியூட் செய்து வைத்து விட்டார். வகுப்பு முடிந்ததும் கடைசியில் தன்னுடைய மாணவர்களிடம் எதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறார்.
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த மாணவர்கள் வகுப்பு தொடங்கிய போது உங்கள் குரலை கேட்க முடிந்தது. ஆனால் 6.10 மணிக்கு எல்லாம் உங்களுடைய குரலை கேட்க முடியவில்லை. செல்போனில் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அதுவும் முடியவில்லை எனக் கூறி இருக்கின்றனர். இதைக் கேட்ட ஆசிரியர் டோங் வாங் அப்பாவியாக தனது மாணவர்களிடம் ரியாக்ஷன் காட்டி இருக்கிறார். இந்த ரியாக்ஷன் புகைப்படம் தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் வேர்த்து விறுவிறுக்க பாடம் நடத்திய டோங் வாங்கின் அனைத்து உழைப்புகளும் வீணாகி தற்போது அந்த வகுப்பு இனனொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.