சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.. மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு மலேசியாவில் இருந்து ஒரு கிலோ கஞ்சா கடத்தியதாக தமிழரான தங்கராஜ் சுப்பையா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரிடம் இருந்து கஞ்சா கைப்பற்றப்படவில்லை என்றாலும் கஞ்சாவை அனுப்பும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார் என்பதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்த வந்த நிலையில் அனைத்து மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து தங்கராஜ் சுப்பையாவின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கராஜ் சுப்பையாவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து ஐநா மனித உரிமை அமைப்பு உட்பட மனித உரிமை ஆர்வலர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் தங்கராஜ் சுப்பையாவுக்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.