இரண்டு வெற்றிகளைக் கொடுத்த சிங்கத்தின் வெற்றியைத் தக்கவைக்கும் மூன்றாவது முயற்சியில் இறங்கியிருக்கிறது சூர்யா-ஹரி கூட்டணி. பல முறை தள்ளிப் போய் ஒருவழியாக இன்று வெளியாகியிருக்கும் ‘சி3’ அல்லது ’சிங்கம் 3’ எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
ஆந்திர பிரதேச போலீஸ் கமிஷனர் (ஜெயபிரகாஷ்) கொலையை விசாரிக்க தமிழ்நாட்டிலிருந்து சிபிஐ மூலம் வரவழைக்கப்படுகிறார் துரைசிங்கம் (சூர்யா). கமிஷனர் கொலையை விசாரிக்கும்போது அதன் பின்னணியில் ஆஸ்திரேலிய நாட்டுக் கார்பரேட் கொள்ளைக் காரனின்(தாகூர் அனுப் சிங்) மிகப் பெரிய சதி இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். சதிகாரர்களை வதம் செய்து நீதியை நிலைநாட்டுவதே மீதிக் கதை.
(துரை)சிங்கத்தின் முத்திரையை அப்படியே தக்கவைத்திருக்கிறது இயக்குனர் ஹரியின் பரபர திரைக்கதையும், சூர்யாவின் போலீஸ் நடிப்பும். இந்த முறை கதையில் மொபைல் நம்பர் ஹாக்கிங், ஹாக்கிங் மூலம் தகவல்களைப் பெறுவது, அந்நிய நாட்டுக் கழிவுகளை இந்தியக் குப்பைத் தொட்டிகளில் கொட்டும் வளர்ந்த நாடுகளின் சதி ஆகிய ட்ரெண்டிங் விஷயங்களை சேர்த்து ரகளையான மசால கலவையைக் கொடுத்திருக்கிறார் ஹரி.
ஆந்திராவில் தொடங்கும் கதை ஆஸ்திரேலியா, தூத்துக்குடி என்று பறந்து தடதடக்கிறது. தொடக்கத்திலேயே ஆந்திர கதாபாத்திரங்கள் அனைத்தும் மக்களின் வசதிக்காக (!) தமிழில் பேசுவார்கள் என்று சொல்லப்படுவதால் குரலசைவுப் பொருத்தமின்மையை மன்னிக்க மனதைப் பழக்கிக்கொள்கிறோம்.
முதலில் சிங்கம் ஸ்டைல் மாஸ் ஹீரோ இண்ட்ரோவுக்குப் பிறகு கொஞ்சம் காமடி, கேரக்டர் எஸ்டாப்லிஷ்மெண்ட், டூயட் பாடல்கள் ஆகியவற்றுக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்படுவது. சிங்கம் மேஜிக் எப்போ வரும் என்று காத்திருக்க வைக்கிறார்கள். ஒரு அரை மணிநேரத்துக்குப் பிறகுதான் திரைக்ககதை சூடுபிடிக்கத் தொடங்குகிறது, அங்கிருந்து சூப்பர் வேகத்தில் பயணிக்கும் திரைக்கதையில் சில பல மாஸான காட்சிகள் ரசிகர்களைக் கட்டிப்போடுகின்றன.
குறிப்பாக ஆஸ்திரேலிய காட்சிகளில் ரசிகர்கள் தொண்டைத் தண்ணீர் வடிய கத்திக் கூச்சல் போடும் அளவுக்கு மாஸ் காட்சிகள் அதகளம்.
முந்தைய படங்களைவிட இதில் செண்டிமெண்ட் கொஞ்சம் குறைவு. இரண்டு நாயகிகள் இருந்தாலும் காதல் காட்சிகளும் அளவோடு இருக்கின்றன. சண்டைக் காட்சிகளில் வழக்கம்போல் காதில் பூசுற்றும் வேலைகள் இருந்தாலும் கதையில் கொஞ்சம் அதிகமாகவே லாஜிக்குக்கும் உண்மைத் தன்மைக்கும் உழைத்திருப்பது தெரிகிறது. முதல் இரண்டு பாகங்களின் காட்சிகளும் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தப்பட்டு கதையின் தொடர்ச்சி நன்கு பதியவைக்கப்படுகிறது. இதெல்லாம் சிங்கம் சீரீஸில் ‘சி3’ன் தினிச்சிறப்புகள் எனலாம்.
இரண்டாம் பாதியில் போலீசின் சிறப்பு, இந்தியாவின் பெருமிதங்கள் அகியவற்றைப் பேசும் காட்சிகள் ஹரியின் வசனங்களில் அவற்றை சூரியா பேசும் விதத்தாலும் சிறப்பாக கையாளப்பட்டு கைதட்டல்களை அள்ளுகின்றன.
இரண்டாம் பாதி மிகவும் நீளமாக இருப்பதுபோன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. கதையில் ஒன்றுமில்லாமல் திரைக்கதையை ஜவாக இழுப்பது எப்படி ஒரு சிக்கலோ அதே போல் கதையில் தேவைக்கதிகமான விஷயங்களை அடைப்பதும் திரைக்கதையை பாதிக்கும். சுவாரஸ்யத்தைக் குறைக்கும். அந்த பிரச்சனை இரண்டாம் பாதியில் அதிகமாகவே தெரிகிறது.
சூரியின் காமடிக் காட்சிகள் மிகச் சில இடங்களில் மட்டுமே சிரிப்பு வரவைக்கின்றன என்பதோடு படம் முழுக்க அவை வலிர்ந்து திணிக்கப்பட்டது போன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. என்னதான் ஆக்ஷன் காட்சிகளில் லாஜிக் மீறல்களுக்குப் மனம் பழகியிருந்தாலும் இறுதியில் நடக்கும் சேஸ் காட்சிகள் அளவுக்கதிகமாக லாஜிக் மீறுகின்றன.
சூர்யா பழகிய களத்தில் வேறொரு பரிமாணத்தில் வழக்கம்போல் அசத்தி மிரட்டுகிறார். நடிப்பில் வழக்கம்போல் குறையில்லை ஆனால் பெரிய சவாலும் இல்லை. வழக்கமான ஹரி படங்களுக்கு செய்வதைப் போல் வசனங்களை உச்சரிக்கும் விதத்தால் அவற்றின் வீச்சை அதிகரிக்கச் செய்கிறார். ஆறு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட மூன்று ’சிங்கம்’ படங்களிலும் உடல்கட்டை ஒரே மாதிரி மெயிண்டெய்ன் செய்திருப்பதற்கு ஒரு தனி சபாஷ்.
அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் என இரண்டு நாயகிகளும் கதையுடன் கச்சிதமாக பொருத்தபட்டிருக்கிறார்கள்.ஆளுக்கு ஒரு டூயட் பாடல். இருவருமே அழகாக இருக்கிறார்கள். நடிப்பதற்குப் பெரிய வாய்ப்பில்லை என்றாலும் பாத்திரம் கோரும் நடிப்பை சரியாக தந்திருக்கிறார்கள்.
சூரி சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். அவரது கதாபாத்திரத்தமும் கதையோடு சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. ரோபோ ஷங்கரை காமடிக்காக இல்லாமல் ஒரு சீரியஸான நல்ல போலீஸ் அதிகாரி வேடத்துக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அவரும் அதை உணர்ந்து தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார். சரத்பாபு, நிதின் சத்யா, கிருஷ், ஆகியோர் தங்கள் பங்கை குறையின்றி செய்திருக்கிறார்கள். ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் ராதிகா தன் அனுபவ முத்திரையை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
முதல் இரண்டு பாகங்களில் வரும் அனைத்து நடிகர்களும் ஓரிரு காட்சிகளில் வந்துபோகிறார்கள். மறைந்த நடிகை மனோரமா உட்பட
வில்லன் நடிகர்கள் தாகூர் அனுப் சிங் பாடிபில்டர் உடலும் உடல்மொழியும் மிரட்டுகின்றன. மற்றபடி வழக்கமான மாஸ் பட வில்லனின் வேலைதான்.
ஒரு தேர்ந்த வசனகர்த்தவாக இந்தப் படத்திலும் தன் திறமையை நிரூபித்துவிட்டார் ஹரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இரண்டு டூயட் பாடல்கள் கேட்பதற்கு இனிமை. பின்னணி இசை முந்தைய இரண்டு ‘சிங்கம்’ படங்களை விட இதில் சிறப்பாக இருக்கிறது. மாஸ் காட்சிகளுக்கு மாஸ் கூட்டப் பயன்பட்டிருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு வழக்கம்போல் ஹரியின் வேகமான திரைக்கதை நகர்வுக்கு தக்க துணை புரிகிறது
நீளம். அளவுகடந்த லாஜிக் மீறல் ஆகிய குறைகள் இருந்தாலும், எண்டெர்டெயின்மெண்ட் அம்சத்தில் ஏமாற்றவில்லை ’சி3’. கமர்ஷியல் மாஸ் ஆக்ஷன் பட விரும்பிகள் இந்தப் படத்தை நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்,
Comments