எஸ்பிபி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. சிம்பு
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யாத திரையுலகினர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தற்போது நடிகர் சிம்பு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்தூவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.
இனிமை என்ற வார்த்தையை உணர்வுப்பூர்வமாக உணர அவர் பாடலை கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர். இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வருவத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ்பிபி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவர் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.
லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும். நம் 'பாடும் நிலா' எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, நாளை 20-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ்பிபி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.
வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்...
இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.