எனது ரசிகர்கள் 'மாஸ்டர்' படத்தையும் பாருங்கள்: சிம்பு அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில் நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் அனைவரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை பாருங்கள் என வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படம் பொங்கல் அன்று வரும் நிலையில் விஜய்யின் படத்தையும் பாருங்கள் என சிம்பு கூறியது அவரது பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. மேலும் அந்த அறிக்கையில் சிம்பு கூறியிருப்பதாவது:
இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம்
வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பரற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் காணவேண்டியது அவசியம்.
அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியாவிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளிமிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.
திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொராணா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும். அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும்.
விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். அரசாங்கம் கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
#Master #Eeswaran #SpreadLove ???? pic.twitter.com/g6SOq1a1uE
— Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments