முதலமைச்சர் எப்படி இறந்தார் என்பதே நமக்கு தெரியாது: சிம்பு

  • IndiaGlitz, [Monday,May 21 2018]

விவேக் நடித்த 'எழுமின்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், கார்த்தி, சிம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிம்பு பேசியதாவது: எனது ரசிகர் ஒருவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து விசாரித்தபோது, எனக்கு கட் அவுட் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இறந்தார் என்பது தெரியவந்ததால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். இனிமேல் எனக்கு தயவுசெய்து யாரும் கட் அவுட் வைக்க வேண்டாம். என் மீது உங்களுக்கு அன்பு இருக்கு, உங்கள் மேல் எனக்கு அன்பு இருக்கு, நம் அன்பை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை' என்று கூறினார்.

மேலும் இந்த நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்குது, எந்த கட்சிக்கு எந்த கொள்கை இருக்குது என்றே தெரியாமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏன், நம் நாட்டின் முதலமைச்சர் எப்படி இறந்தார் என்றே தெரியாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்' என்று கூறினார்

மேலும் விஷால் எடுத்த ஒருசில முடிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் அவரை எதிர்த்து பேசியது உண்மைதான். அதே நேரத்தில் விஷால் செய்வது அத்தனையும் தவறு என்று நான் கூற மாட்டேன். நடிகர் சங்க கட்டிடத்தின் துவக்க விழாவிற்கு நடிகர் சங்க உறுப்பினர் என்ற முறையில் என்னை நேரில் அழைத்த விஷாலுக்கு நன்றி தெரிவித்தேன். அவரது அழைப்பிற்கிணங்க அந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன் என்று சிம்பு கூறினார்.

மேலும் நமது குழந்தைகளுக்கு வெறும் படிப்பு மட்டுமே சொல்லி கொடுக்க வேண்டும் என்றில்லாமல் ஒரு தற்காப்புக்கலையும் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற கருத்துடன் கூடிய படத்தை எடுத்துள்ள 'எழுமின்' குழுவினர்களுக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன்' என்று சிம்பு இறுதியில் கூறினார்.