கட்-அவுட், பேனர் வைத்து கெத்து காட்ட வேண்டிய அவசியம் இல்லை: சிம்பு

  • IndiaGlitz, [Wednesday,January 16 2019]

கோலிவுட் திரையுலகில் பெரிய நட்சத்திரங்களில் படங்கள் வெளியாகும்போது கட் அவுட், பேனர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது என்பது ரசிகர்களால் கடந்த பல வருடங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாக உள்ளது. கட் அவுட், பேனர், பாலாபிஷேகம் செய்யும் பணத்தில் ஏழைகளுக்கு உதவும்படி ஏதாவது செய்யலாம் என நடிகர்களும் அவ்வப்போது தங்கள் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி வந்தபோதிலும் இந்த கட் அவுட் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்து சிம்பு வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ரசிகர்களுக்கு இரண்டு வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். அதில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படம் வெளியாகும் தினத்தில் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம் என்றும், தியேட்டர் கவுண்டரில் என்ன விலையோ அதனை மட்டும் கொடுத்து வாங்கி படத்தை பார்த்து ரசிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேபோல் ரிலீஸ் தினத்தில் கட் அவுட், பேனர், பாலாபிஷேகம் செய்துதான் மாஸ், கெத்துவை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும், அந்த பணத்திற்கு தாய், தந்தைக்கு வேட்டி, புடவையும் தம்பி, தங்கைகளுக்கு ஏதாவது வாங்கி கொடுத்து அதனை புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பி வைத்தால் அதைவிட பெரிய சந்தோஷம் தனக்கு இல்லை என்றும் சிம்பு கூறியுள்ளார். ரசிகர்களாகிய உங்களை மகிழ்விக்க வேண்டியது எப்படி என்னுடைய கடைமையோ, அதேபோல் உங்களது பெற்றோர்களை மகிழ்விக்க வைக்க வேண்டியது உங்களுடைய கடமை என்றும் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். சிம்புவின் வேண்டுகோளின்படி 'வந்தா ராஜாவாதான் வருவேன்' பட ரிலீசின்போது கட் அவுட், பேனர்களை ரசிகர்களை தவிர்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.