சிம்பு-பாண்டிராஜின் 'இது நம்ம ஆளு' திரை முன்னோட்டம்

  • IndiaGlitz, [Thursday,May 26 2016]

பாண்டிராஜின் முதல் படமான 'பசங்க' படத்தில் இருந்தே அவருடைய படம் என்றாலே நகைச்சுவை, காதல், கடைசியாக ஒரு மெசேஜ் என்ற பார்முலா இருக்கும். அந்த வரிசையில் நாளை வெளிவரவுள்ள இன்னொரு படம் 'இது நம்ம ஆளு.

சிம்பு-நயன்தாரா இடையே ஒரு பிரிவு ஏற்பட்டு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவே மாட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அனைவரையும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருவரையும் ஒரே படத்தில் இணைத்ததே பாண்டிராஜின் ஒரு சாதனையாகத்தான் சொல்ல வேண்டும். அதுவும் இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட அவர்கள் சொந்த வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை தழுவி உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரைலரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சிம்பு ஒரு சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று பல வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த படம் அந்த குறையை தீர்த்து வைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிம்பு இந்த படத்தில் தனது வழக்கமான பாணியை முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டு பாண்டிராஜின் நாயகனாகவே மாறியுள்ளார். சண்டைக்காட்சி இல்லாத, பஞ்ச் வசனம் இல்லாத முதல் சிம்பு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் ஒற்றைக்கால் நடனமும் இந்த படத்தின் ஒரு பிளஸ் என்பது குறிப்பிடத்தக்கது

தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரெளடிதான்' ஆகிய ஹாட்ரிக் வெற்றி படங்களில் நடித்த நயன்தாராவுக்கு இந்த படமும் அடுத்த வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாமர் இல்லாமல் முழுக்க முழுக்க சேலை மற்றும் சுடிதாரில் நடித்துள்ள நயன்தாரா இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் நாயகன் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டாகியுள்ளது இந்த படத்திற்கு கிடைத்த பலமாக கருதப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல்களை சிம்பு, யுவன்சங்கர் ராஜா, ஸ்ருதிராஜா, டி.ராஜேந்தர், குறளரசன் ஆகியோர் பாடியுள்ளனர். பல வெற்றிப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் எதிர்பார்ப்புடன் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படத்தின் விமர்சனம் குறித்து நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.