ஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,September 23 2021]

சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது வறுமையின் காரணமாக ஓலா டாக்சி ஓட்டி வருவதாக நடிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

சிம்பு, நயன்தாரா, ரீமாசென் நடிப்பில் உருவான திரைப்படம் ’வல்லவன்’. இந்த படத்தின் காமெடி காட்சி ஒன்றில் சந்தானம் பள்ளி மாணவிகள் மீது ஒரு பேப்பரை தூக்கி எறிவார். அப்போது ஒரு மாணவி வெறும் பேப்பரை தூக்கி எறியாதே, ஏதாவது எழுதி அனுப்பு என்று கூறும் காமெடி காட்சி இன்றளவும் தொலைக்காட்சிகளில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த காமெடி காட்சியில் நடித்த அந்த பள்ளி சிறுமி தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார் என்பதும், அதுமட்டுமின்றி அவர் தற்போது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதோடு, ஓலா டாக்சி ஓட்டி தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றும் ’வல்லவன்’ படத்தில் நடித்த ’காதல்’ சுகுமார் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்து உள்ளார். மேலும் அவர் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

வல்லவனில் ..ஸ்கூல் போர்ஸனில் நகைச்சுவை காட்சி ஒன்றில் சந்தானம் பேப்பரை தூக்கி எறிய அதை எடுக்கும் மாணவி என்னா வெறும் பேப்பரை தூக்கி எறியுற.. எதாச்சும் எழுதிக்குடு என்று அதகளம் பண்ணியிருக்கும்.. சமீபத்தில் நான் கதை நாயகனாக நடிக்கும் படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடிக்க கொடைக்கானல் வந்திருந்தாள். எனக்கு அடையாளமே தெரியவில்லை. இன்னும் நடிப்பில் பட்டைய கெளப்பும் அவளுக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமையாமல் காதல் கல்யாணம் பண்ணியவளுக்கு இரண்டு பிள்ளைகள்.. இப்போது கணவனால் கைவிடப்பட.. ஓலா டாக்ஸி ஓட்டி குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். எல்லா கார்களையும் அனாசயமாக ஓட்டுகிறாள். முடிந்தவரை வாய்ப்புகள் சொல்வதாக சொல்லியிருக்கிறேன். வாய்ப்புகள் அமையட்டும் லக்ஷ்மி’ என பதிவு செய்துள்ளார்.