சிம்புவின் இமேஜை உச்சத்திற்கு கொண்டு சென்ற 'தொட்றா'

  • IndiaGlitz, [Monday,November 27 2017]

சிம்பு என்றாலே சர்ச்சையும் சண்டையும் தான் என்பது கோலிவுட் திரையுலகினர்களின் பார்வை. இப்போதுகூட அவர் மணிரத்னம் படத்தில் இருக்கின்றாரா? இல்லையா? என்ற குழப்பம் கோலிவுட் திரையுலகினர்களிடையே உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி சிம்புவின் இமேஜை ஒரேயடியாய் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாம். இயக்குனர், நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் படம் 'தொட்றா'. இந்த படத்தை கே.பாக்யராஜின் சிஷ்யர் மதுராஜ் இயக்கி வருகிறார். வீணா நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு உத்தமராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என இசையமைப்பாளர் உத்தமராஜா கருதினாராம். ஆனால் படக்குழுவினர் யாருக்கும் சிம்பு அறிமுகமே இல்லை. இந்த நிலையில் இந்த பொறுப்பை கையில் எடுத்த ஹீரோ பிருத்விராஜ், சிம்புவுக்கு இதுகுறித்து மெசேஜ் அனுப்பியுள்ளார். உடனடியாக பதிலளித்த சிம்பு, டிராக்கை அனுப்ப சொல்லி கேட்டாராம். டிராக் பிடித்துவிட்டதால் உடனடியாக வந்து பாடி கொடுத்துவிட்டு சென்றாராம். 'தொட்றா' படக்குழுவினர்களுக்கு நம்பவே முடியவில்லை. பன்முக திறமை கொண்ட ஒரு நட்சத்திரம் எந்த கேள்வியும் கேட்காமல், சம்பளம் பற்றி கூட பேசாமல் பாடி கொடுத்ததை ஆச்சரியமாக பார்த்தார்களாம்

இதெல்லாவற்றையும் விட பாடி முடித்துவிட்டு ரிகார்டிங் தியேட்டரில் இருந்து வெளியே செல்லும்போது, 'எனக்கு உங்கப்பாவை ரொம்ப பிடிக்கும்,அதனால் தான் பாடினேன் என்று சொல்லிவிட்டு போனது பிருத்விராஜூக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?