ரசிகர் மன்றத்தை வேற லெவலில் விரிவுபடுத்த சிம்பு திட்டம்: பரபரப்பு அறிக்கை!

  • IndiaGlitz, [Thursday,September 30 2021]

நடிகர் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக அதிக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் சிம்பு ரசிகர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது என்பதையும் அனைவரும் அறிவர். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிம்பு அதிக படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள ’மஹா’ மற்றும் ’மாநாடு’ திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தற்போது அவர் ’வெந்து தணிந்தது காடு’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருந்தாலும், ரசிகர் மன்றத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல சிம்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதிப்பும் அன்பும் கொண்ட என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே, வணக்கம்! நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால் உங்களிடம் நேரடியாக உறவாடாமல், உங்களின் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம்.

ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. ஆகையால் மாநில, மாவட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சிம்பு அறிவித்துள்ளார்.

சிம்பு தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சி பாணியில் கொண்டு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.