'வாலு' திரைவிமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் இதுவரை எந்த படமும் சந்திக்காத அளவுக்கு பல சோதனைகளை தாண்டி மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ள சிம்பு படம், இளையதளபதி விஜய்யின் உதவியாலும், தல அஜீத்தின் வெறித்தனமான ரசிகர் சிம்பு என்பதாலும் இருதரப்பு ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட படம், அனைத்து தரப்பினர்களையும் திருப்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.
ரயில்வேயில் எஞ்சின் டிரைவர் வேலைபார்க்கும் ஆடுகளம் நரேனின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஷார்ப் (சிம்பு). அம்மா ஸ்ரீரஞ்சனி மற்றும் தங்கை என அன்பான குடும்பத்தில் இருந்தாலும், தமிழ் சினிமாவின் இலக்கணப்படி எந்த வேலையும் செய்யாமல் சந்தானம், விடிவிகணேஷ் போன்ற நண்பர்களுடன் ஊர் சுற்றுபவர். வேலை வெட்டியில்லாமல் ஊர் சுற்றுபவர்கள் செய்யும் ஒரே வேலை காதல் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒருநாள் ஹன்சிகாவை பஸ்ஸில் பார்த்தபோது, பார்த்தவுடன் காதல் வருகிறது.
வழக்கம்போல பல ஹீரோயிஸம் செய்து தனது காதலை ஹன்சிகாவிடம் சொல்கிறார் சிம்பு. ஆனால் ஹன்சிகாவோ தனக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகிவிட்டது என்றும், மாப்பிள்ளை சென்னையில் பிசினஸ் செய்கிறார் என்றும் இரண்டு வருடங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் என்றும் நாம் வேண்டுமானால் நண்பர்களாக இருக்கலாம் என்றும் சொல்கிறார். முதலில் ஷாக் ஆனாலும் இன்னும் இரண்டு வருடம் இருக்கின்றதே திருமணத்திற்கு, அதற்குள் நாம் ஹன்சிகாவை கரெக்ட் செய்துவிடலாம் என்று தன்னம்பிக்கையுடன் சந்தானம் அண்ட் கோ உதவியுடன் களத்தில் இறங்குகிறார். பத்தே நாட்களில் ஹன்சிகாவின் வாயினாலே காதலை சொல்ல வைப்பதாக நண்பர்களிடம் சிம்பு சவால்விடுகிறார். இதற்கிடையில் ஹன்சிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பவர் பெரிய தாதா என்றும், அவர் ஹன்சிகாவின் மீது உயிரையே வைத்துள்ளார் என்றும் சிம்புவுக்கு தெரிய வருகிறது. பத்து நாளில் அவர் ஹன்சிகாவை காதலிக்க வைத்தாரா? தாதாவின் எதிர்ப்பை எப்படி சமாளித்தார் என்பதுதான் மீதிக்கதை.
முழுக்க முழுக்க இது சிம்பு அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட படம்தான். ஒவ்வொரு பிரேமிலும் அவர்தான் வருகிறார். சந்தானத்துடன் தண்ணியடித்து விட்டு உளறுவது, ஹன்சிகாவை இம்ப்ரஸ் செய்ய அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகள், தங்கையிடம் செல்லமாக சண்டை போடுவது, அப்பாவிடம் மரியாதையாக இரண்டு அடி தள்ளியே நிற்பது, அவ்வப்போது காதல் தத்துவங்களை அள்ளிவீசுவது, வில்லன்களோடு ஆக்ரோஷமாக மோதுவது என சிம்பு தன்னுடைய ரசிகர்களுக்கு தேவையான தீனியை போட்டு தனது முழு பெர்மான்ஸை இந்த படத்தில் கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஹன்சிகா வழக்கம்போல அழகு பதுமையாக வருகிறார். நிச்சயித்த மாப்பிள்ளைக்கும், காதலிக்கும் சிம்புவுக்கும் இடையில் மாட்டிக்கொள்ளும் கஷ்டமான கேரக்டர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதுபோலே தெரியவில்லை. கவர்ச்சியான உடையுடன், சிம்புவுடன் அவ்வபோது டூயட் பாடி ஏதோ சமாளித்துள்ளார்.
சந்தானத்தின் டைமிங் காமெடி இதிலும் இருக்கின்றது. ஆனால் சில இடங்களில் ஓவர்டோஸ். ஒவ்வொரு முறையும் சிம்புவை கலாய்த்துவிட்டு, பின்னர் பல்பு வாங்குவதையே திரும்ப திரும்ப காண்பிப்பதால் போரடிக்கின்றது. விடிவி கணேஷ் வழக்கம்போல் தன்னுடைய கரகரப்பான குரலில் எரிச்சலூட்டுகிறார்.
ஆடுகளம் நரேனின் கேரக்டரில் அழுத்தம் இருந்தாலும் அவருக்கு அதிக வாய்ப்பில்லை. ஆனாலும் அவர் காட்சிகள் இந்த படத்திற்கு ஆறுதலாக உள்ளது. இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்க மாட்டாரா? என்று எல்லோரும் ஏங்கும் அளவுக்கு அவருடைய கேரக்டர் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது.
வில்லனாக நடிப்பவருக்கு சண்டைக்காட்சியே இல்லாமல் இருப்பது அனேகமாக தமிழ் சினிமாவில் இந்த படமாகத்தான் இருக்கும். பார்வையாலே எல்லோரையும் பயமுறுத்துகிறார். தான் கட்டிக்கொள்ள இருக்கும் பெண்ணை சிம்பு மடக்கிவிட்டார் என்று தெரிந்ததும் ஆத்திரப்பட்டு எல்லா தமிழ் சினிமா வில்லன்போல் சீறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் கிளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு தமிழ் சினிமாவுக்கு புதிது மட்டுமல்ல...இந்த படத்திற்கும் பொருத்தமான கிளைமேக்ஸ்
தமனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். ஓ மை டார்லிங் பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜீத் போல சிம்பு நடனம் ஆடுவது 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை பார்ப்பதுபோல் உள்ளது. இதெல்லாம் தேவையா நடன இயக்குனரே? பின்னணி இசை ஓகே.
இயக்குனர் விஜய் சந்தர், ஒவ்வொரு காட்சியையும் காமெடியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை மட்டுமே யோசித்துள்ளார். நம்ப முடியாத சண்டைக்காட்சிகள், ஓவர் பில்டப் காட்சிகள், 'பொண்ணுங்க காதல் கொக்கு மாதிரி, குளத்துல தண்ணி தீர்ந்ததும் வேற குளத்துக்கு போயிடும், ஆனால் பசங்க காதல் அந்த குளத்துல இருக்குற மீன் மாதிரி, அந்த குளத்திலேயே கடைசி வரை இருந்து உயிரை விடும் போன்ற போன்ற காதல் தத்துவ வசனங்கள், இதெல்லாம் உண்மையிலேயே இயக்குனரின் ஐடியாவா அல்லது சிம்புவின் தலையீடா? என்ற சந்தேகம் எழுகிறது. லாஜிக் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் பல காட்சிகளை வைத்துள்ளார் இயக்குனர். ஹன்சிகாவை சிம்பு இம்ப்ரஸ் செய்யும் டெக்னிக் எல்லாம் பத்து வருடங்களுக்கு முந்தைய டெக்னி என்பது இயக்குனருக்கு ஏன் தெரியவில்லை என்பது புரியவில்லை? விஜய்சந்தர் இன்னும் கொஞ்சம் நன்றாக யோசித்திருக்கலாம்.
மொத்தத்தில் 'வாலு' சிம்புவின் ரசிகர்களுக்கு மட்டுமே ஜோரு..
2.5/5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com