சிம்புவின் கார் மோதி விபத்து: முதியவர் பரிதாப பலி!

  • IndiaGlitz, [Wednesday,March 23 2022]

நடிகர் சிம்புவின் கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை இளங்கோ நகர் என்ற பகுதியில் கடந்த 18ஆம் தேதி சிம்புவின் கார் சென்று கொண்டிருந்தபோது முதியவர் ஒருவர் மீது கார் ஏறியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை அவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிம்புவுக்கு சொந்தமானது என்றும் காரை அவரது ஓட்டுநர் செல்வம் என்பவர் ஓட்டி வந்ததாகவும் தெரிகிறது. மேலும் இந்த கார் விபத்து நடந்தபோது காரின் உள்ளே சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் இருந்ததாகவும் ஆனால் இந்த விபத்துக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிம்புவின் டிரைவர் செல்வத்திடம் பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.