காவிரி பிரச்சனை குறித்து சிம்புவின் ஆவேச பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
காவிரி மேலாண்மை அமைப்பதற்கும், ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கும் நடிகர் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சிம்பு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர் கூறியதாவது: இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி என்னை யாரும் அழைக்கவில்லை. திரைத்துறையில் பல பிரச்சனைகள் இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடில்லை.
ரொம்ப நாளாக தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துக் கொண்டிருக்கிறது. அது என்ன என்று பார்த்தால், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு சூனியம் வைத்தது போல் உள்ளது. அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதை முறையாக கண்டுபிடிக்க வேண்டும்.
இங்கு போராட்டம் நடத்துகிற அரசியல்வாதிகள் யாருக்கும் மக்களுக்கு நீர் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அவர்கள் எல்லோரும் அரசியல் செய்கிறார்கள். இதை அரசியலாக்கி ஓட்டாக்க நினைக்கிறார்கள்.
காவிரி பிரச்சினை நடந்து வரும் நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் எல்லாம் தேவையா? நம்ம வாழ்க்கையே ஒரு விளையாட்டாக இருக்கும் போது இந்த விளையாட்டு தேவையா, நாம் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நல்ல கருத்து தான், ஆனால் இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் வந்திருக்கு. தோனி, இரண்டாவது தடவையாகவும் கேப்டனாக வருகிறார். அவர் மேல் எனக்கு. மிகுந்த மரியாதை உண்டு. நம் தமிழ்நாடு மீதும், சென்னை மக்கள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பை விட அதிகமாக அன்பு வைத்துள்ளவர் தோனி. அவர் கண்டிப்பாக இந்த விஷயத்தைப் பார்ப்பார். அவர் போராட்டம் நடத்த வேண்டும், போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. உங்களால் செய்ய முடியும் சின்ன விஷயத்தை எதாவது ஒரு ரூபத்தில் செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறேன்.
காவிரிக்காக போராடும் தமிழக மக்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். 2016ஆம் ஆண்டு வெள்ளம் வந்து தண்ணீர் தமிழகத்தில் ஆறாய் ஓடியது. அந்த தண்ணீரை சேமிக்க நாம் என்ன செய்தோம். காவிரி விஷயத்தில் எல்லாமே அரசியல்தான்.
கர்நாடக மாநில மக்கள் தண்ணீர் தர மாட்டேன் என்று இதுவரை சொல்லவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே கூறி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் தேவை போக மீதியுள்ள தண்ணீரை தமிழகத்திற்கு தாருங்கள் என்று கர்நாடக மாநில தாய்மார்களை கேட்டால் நிச்சயம் அவர்கள் நமக்கு தண்ணீர் தருவார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 11 ம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணிக்குள் கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து கர்நாடக மக்கள் வீடியோவாக வெளியிட வேண்டும் என்று நான் கேட்டு கொள்கிறேன். அப்படி தண்ணீர் தராவிட்டாலும் நாங்கள் வன்முறையில் இறங்க மாட்டோம். அதுதான் தமிழன்' என்று ஆவேசமாக பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout