கிரிக்கெட் பேட்டை கையிலெடுத்த சிம்பு: விஜயதசமியன்று காத்திருக்கும் விருந்து!

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ மற்றும் சுசீந்திரன் இயக்கி வரும் டைட்டில் வைக்கப்படாத திரைப்படம் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று சமூகவலைதளத்தில் மீண்டும் இணைந்த சிம்பு இன்று முதல்முறையாக தன்னுடைய படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை அதில் வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் 46வது திரைப்படத்தின் பர்ஸ்ட் சைட் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் தேதி விஜயதசமி தினத்தன்று அதாவது அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சிம்பு ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் சிம்பு கையில் கிரிக்கெட் பேட் வைத்துள்ளார் என்பதால் இது ஒரு கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கனவே கபடி உள்ளிட்ட விளையாட்டு குறித்த திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இம்முறை கிரிக்கெட் களத்தில் களமிறங்குகிறார் என்று இதன் மூலம் தெரிய வருகிறது.