'புலி' ஒரு முழுமையான விஜய் படம். சிம்புதேவன் பேட்டி

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

இந்தியாவே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு படமாக இருக்கும் 'புலி' ரிலீஸ் நேரத்தில் உங்கள் உணர்வு எப்படி உள்ளது?

இந்த படத்தின் கதையை நான் விஜய் சாரிடம் சொன்னபோது அவர் கதையின் மீது உள்ள நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருடைய நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதே என்னுடைய முதல் குறிக்கோளாக இருந்தது. இந்த நிமிடம் வரையில் அவருக்கு திருப்திபடும்படியாக வேலை செய்துள்ளதாக நினைக்கின்றேன். கண்டிப்பாக இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நீங்கள் இதற்கு முன் இயக்கிய நான்கு படங்களையும் விட 'புலி' படத்தின் பட்ஜெட் மிக அதிகம். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

கதைக்கு தகுந்தவாறுதான் நான் பட்ஜெட்டை முடிவு செய்வேன். இதற்கு முன் நான் இயக்கிய படங்களின் கதைக்கு தகுந்தவாறு பட்ஜெட்டை முடிவு செய்ததுபோல இந்த கதைக்கு இதுதான் பட்ஜெட் என நான் முடிவு செய்தேன்


விஜய்யின் முதல் ஃபேண்டஸி படம் 'புலி'. இதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டது எப்படி?

இந்த படத்தின் கதையை கேட்டவுடன் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. விஜய் சாரின் முதல் ஃபேண்டஸி படத்தை இயக்குவதில் எனக்கு பெருமைதான். கதையை கேட்டதும், இந்த கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். கதையில் இருப்பதை முழுவதும் திரையில் கொண்டு வந்துவிடுங்கள் என்று என்னிடம் கூறினார். அவர் கூறிய அறிவுரையின்படி எங்களுடைய டீம் கூடுதல் கவனத்துடன் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளோம்.

பல வருடங்களுக்கு பின்னர் ஸ்ரீதேவி தமிழில் எண்ட்ரி ஆகிறார் .அவரை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இந்த கதையின் முக்கிய கேரக்டருக்கு ஸ்ரீதேவிதான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்து அவரை மும்பையில் சந்திக்க சென்றேன். அவர்கள் என்னிடம் முதலில் சொன்னது, 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்திற்கு பின்னர் பல கதைகள் நான் கேட்டேன். ஆனால் அவையெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. அதேபோல் இந்த கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். உங்களுக்கு ஓகேதானே என்று சொன்னார்கள். கதையை கேட்டு முடித்ததும் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கின்றேன். தமிழ் படத்தில் 28 வருடங்களுக்கு பிறகு, அதுவும் விஜய் போன்ற பெரிய நடிகருடன் நடிக்க எனக்கும் ஆசைதான் என்று கூறினார்.

படப்பிடிப்பின்போது கதையின் கேரக்டரில் ரொம்ப இன்வால்வ் ஆகி எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். நடிப்பு முதல் டப்பிங் வரை அவர் கொடுத்த ஒத்துழைப்பு மிகப்பெரியது. ஸ்ரீதேவியுடன் ஒரு படத்தில் பணிபுரிந்தது எனக்கு மட்டுமின்றி எங்கள் டீமுக்கே ஒரு பெருமைதான்.

ஸ்ருதிஹாசன், ஹன்சிகா இரண்டு பெரிய ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்தது குறித்து?

இந்த படத்தின் கதைக்கு எனக்கு இரண்டு ஹீரோயின் தேவைப்பட்டார்கள். இதில் ஸ்ருதிஹாசன் மெயின் ஹீரோயின். அவருடைய டெடிகேஷன் நடிப்பு எங்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார். அதேபோல் ஹன்சிகா இந்த படத்தில் இளவரசி கேரக்டரில் நடித்துள்ளார். மூன்று மணி நேரத்திற்கு முன்பே மேக்கப் போட்டுக்கொண்டு படப்பிடிப்பிற்கு தயாராவது, டான்ஸ் பிராக்டீஸுக்கு சரியான நேரத்தில் வருவது போன்றவற்றில் அவர் காட்டிய அக்கறை பெரிதும் பாராட்டக்குடிய வகையில் இருந்தது.

உங்கள் படங்கள் அனைத்திலுமே காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். இந்த படத்தில் எப்படி?

காமெடி என்பது எப்போதுமே கதையுடன் வரவேண்டும். அப்பொழுதுதான் ஆடியன்ஸை கவரும். இந்த படத்திலும் கதையுடன் கூடிய காமெடி காட்சிகளைத்தான் அமைத்துள்ளேன். தம்பி ராமையா, சத்யன் ஆகிய இருவரின் காமெடி குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். அதுமட்டுமின்றி ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, வித்யூலேகா ஆகியோர்களை இந்த படத்தில் எந்த இடத்தில் காமெடிக்கு பயன்படுத்த வேண்டுமோ, அந்த இடத்தில் சரியாக பயன்படுத்தியுள்ளோம்.

இந்தியா முழுவதும் கேட்கப்படும் ஒரு கேள்வி 'பாகுபலி'யுடன் 'புலி'யை ஒப்பிடலாமா என்பதுதான். இதற்கு உங்கள் பதில் என்ன?.

சமூக வலைத்தளங்களில் பாகுபலி'யுடன் ஒப்பிட்டு 'புலி'யை விவாதித்து வருகின்றனர். இந்த படத்தை யாரும் பாகுபலியுடன் ஒப்பிட வேண்டும். இரண்டு படங்களும், பீரியட் படங்களாகவும், கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த படங்களாக இருந்தாலும் இரண்டு படங்களின் கதைக்களம் முற்றிலும் வேறு வேறானவை. பாகுபலி'யில் இருக்கும் போர்க்காட்சிகள் 'புலி'யில் இல்லை. அதேபோல் இந்த படத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், காமெடி, பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் முற்றிலும் வேறு ஒரு கதைக்கு தகுந்தவாறு அமைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தபடத்திற்கு வந்தால் கண்டிப்பாக உங்கள் மனதை கவரும் படமாக இந்த படம் இருக்கும் என்பதுதான் உண்மை.

முதல்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளீர்கள். உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

விஜய் சார் குறித்து ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அவர் பர்பக்ஷனின்ஸ்ட். தொழிலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் அவர் பர்பக்ஷனின்ஸ்ட் என்பதை அவருடன் பழகியதில் இருந்து புரிந்து கொண்டேன். ஒவ்வொரு காட்சிகளிலும் மிக நுணுக்கமாக நடிப்பை வெளிப்படுத்துவார். ஒரு இயக்குனருக்கு, ஒரு கதைக்கு அவர் காட்டும் நுணுக்கமான நடிப்பு ஒரு பெரிய பலம்.


கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சுதீப்பை எப்படி நெகட்டிவ் ரோலில் நடிக்க சம்மதிக்க வைத்தீர்கள்?

நான் முதலில் அவரை பார்க்க சென்றபோது, 'நான் இப்பொழுதெல்லாம் நெகட்டிவ் ரோலில் நடிப்பது இல்லை. நீங்கள் கதை சொல்லி வேஸ்ட் என்றுதான் என்னிடம் முதலில் கூறினேன். நீங்கள் இந்த படத்டை ரிஜக்ட் செய்தாலும் பரவாயில்லை. உங்களை நினைத்துதான் இந்த கேரக்டரை உருவாக்கினேன். நீங்கள் இந்த கதையை கேட்டுவிட்டு அதன்பின்னர் பதில் கூறுங்கள் என்று நான் கூறியவுடன் கதை கேட்க தொடங்கினார். கதையை கேட்டு முடித்தவுடன் கண்டிப்பாக இந்த படத்தில் நடிக்கின்றேன் என்று கூறினார். அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

விஜய் படங்களில் இருக்கும் கமர்ஷியல் விஷயங்கள் இந்த படத்தில் இருக்குமா?

இது ஒரு பேண்டஸி எண்டர்டெயின்மெண்ட் என்று சொல்லப்பட்டாலும் முதலில் நான் சொல்வது என்னவெனில் கண்டிப்பாக விஜய் ரசிகர்கள் ரசிக்கத்தக்க வகையில், அவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் கண்டிப்பாக இந்த படத்தில் இருக்கும்.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் குறித்து?

தேவிஸ்ரீ பிரசாத் ஒரு மிகப்பெரிய எனர்ஜி உள்ள நபர். இந்த படத்தின் கதை குறித்து அவரிடம் அதிகம் பேசியிருக்கின்றேன். இந்த படத்தின் கதையை அவர் உள்வாங்கிக்கொண்டு அவர் போட்ட முதல் டியூனே கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்பது ஒரு ஆச்சரியம். மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்துதான் எழுதியுள்ளார். அவரது எழுத்தே ஒரு மாயாஜாலம்தான். நாங்கள் ஒரு வார்த்தைக்கு பலமணி நேரம் யோசிப்போம். ஆனால் அவர் கூறும் வார்த்தை ஒரு மாயாஜாலமாக இருந்ததை கவனித்து அதிசயித்தோம்.

இந்த படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?

விஜய் சார் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடிய ஏண்டி ஏண்டி' பாடல்தான் என்னுடைய ஃபேவரிட் பாடல். இந்த பாடலை தாய்லாந்தில் உள்ள ஒரு ஏரி அருகிலும், கேரளாவில் ஒருசில இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.


இந்த படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் குறித்து?

இந்த படத்தின் முக்கியமான டெக்னீஷியன்கள் ஆர்ட் இயக்குனர் முத்துராஜ் மற்றும் கிராபிக்ஸ் சூப்பர்வைசர் கமலக்கண்ணன். இதுமாதிரியான ஃபேண்டசி படங்களை பொதுவாக மூன்று நான்கு வருடங்களில்தான் எடுக்க முடியும். ஆனால் இவர்கள் இருவரும் கொடுத்த வேகம்தான் இந்த படத்தை ஒன்றரை வருடங்களில் முடிக்க எங்களுக்கு உதவி செய்தது.

புலி' ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. வட இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இந்த படம் இருக்குமா?

இதுமாதிரியான ஃபேண்டசி படத்திற்கு வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதுமாதிரியான படத்திற்கு மொழி தேவையில்லை. உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மொழியினர்களும் ரசிக்கத்தக்க வகையிலான படம் இது.


புலி' படம் குறித்து உங்கள் இறுதியான கருத்து என்ன?

இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்க வைத்ததற்கு முக்கிய காரணம் மீடியாக்கள்தான். அவர்களுக்கு என்னுடைய நன்றி. மீடியாக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இந்த படம் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் ஒரு முழுமையான விஜய் படமாக இருக்கும். எனவே கண்டிப்பாக எல்லோரும் இந்த படத்தை தியேட்டரில் பாருங்கள். நன்றி.

More News

விஜய்-எஸ்.ஜே.சூர்யா படம் குறித்த புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்...

'தாரை தப்பட்டை' டப்பிங் பணியில் வரலட்சுமி

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில்...

முடிவுக்கு வந்தது சூர்யாவின் '24'

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்த 'பசங்க 2' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில்...

இன்று நள்ளிரவில் 'வேதாளம்' டீசர் - மதன்கார்க்கி தகவல்

அஜீத் நடித்து வரும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் அக்டோபர் 1ஆம்....

விஜய் உள்பட 'புலி' படக்குழுவினர் வீடுகளில் வருமானவரி துறையினர் சோதனை

இளையதலைமுறை விஜய் நடித்த 'புலி' திரைப்படம் நாளை பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் நடிகர் விஜய், இயக்குனர் சிம்புதேவன், புலி படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.....