உண்மை இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். சிம்பு ஆவேசம்

  • IndiaGlitz, [Tuesday,September 15 2015]

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலை ஒட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராதிகா சரத்குமார், சரத்குமார் ஆகியோர் விஷால் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு கூறியதாவது, "ஒரு நடிகன், டி.ராஜேந்தர் மகன் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதன் என்பதை ஆன்மீகம் மூலம் உணர்ந்தவன் நான். நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம் போன்றது. நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த சங்கம். நான் 16 வயதில் இருந்தே நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் கமிட்டி மெம்பராகவும் இருந்துள்ளேன்.

விஜய்காந்த் சார் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தபோது நான் உறுப்பினராக இருந்துள்ளேன். இந்த சமயத்தில் என்னிடம் பலர் 'இளையதலைமுறை நடிகர்கள் இருக்கும் அணியில் இல்லாமல் இந்த அணியில் ஏன் இருக்கின்றீர்கள் கேட்டார்கள். என்னை பொருத்தவரையில் இளைஞர்கள் எந்த அணியில் இருக்கின்றனர், முதியோர்கள் எந்த அணியில் இருக்கின்றனர் என்பது முக்கியமில்லை. உண்மை எங்கு இருக்கின்றது என்பது தான் முக்கியம்.

எனக்கு ஒரு பிரச்சனை வரும்போது உண்மையாகவே யார் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்பதை கடவுள் சொல்லி கொடுத்துள்ளார். எனக்கு சரத்குமார் அவர்களிடமோ, ராதாரவி அவர்களிடமோ எதற்கும் போய் நிற்கவேண்டும் என்ற நிலை கிடையாது. அப்படி நான் வளரவில்லை. எனக்கு உண்மையாகவே இரு பிரிவாக நடிகர் சங்கம் இருப்பது பெரும் வேதனையை தருகிறது. ராதாரவி அவர்கள் இன்று என்னிடம் போனில் இந்த கூட்டத்திற்கு அழைத்தபோது நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் வருகிறேன், எந்த பதவிக்கு நிற்க சொன்னாலும் நிற்கிறேன் என்று கூறித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

உண்மையாகவே ஒரு தவறு நடந்திருந்தால், அந்த தவறை தட்டி கேட்பதற்கு முதல் ஆளாக நான் நிற்பேன். ஆனால் ஒன்றுமே இல்லாமல் எந்த ஆதாரமும் இல்லாமல் தவறு நடந்ததாக கூறினால் அவர்களை எப்படி ஆதரிக்க முடியும். உண்மையாகவே நடிகர் சங்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதையும், பிரச்சனை வேறு என்பதையும் புரிந்து கொண்ட நான், தற்போது இந்த அணிக்கு ஆதரவு தருகிறேன்.

எங்களுக்கு வெற்றி தோல்வி முக்கியமல்ல. நாங்கதான் ஜெயிப்போம், பதவியை கைப்பற்றுவோம் என்பதற்காக நான் இங்கு வரவில்லை. இங்கு உண்மை இருப்பதால் இந்த படத்தில் நிற்கின்றேன். நாளை நடிகர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உண்மையாகவே இந்த அணி உதவி செய்யும் என்று நான் நம்புவதால்தான் இந்த அணியில் உள்ளேன். தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறட்டும். அதைபற்றி எனக்கு கவலை இல்லை. யார் வெற்றி பெற்றாலும் உண்மை என்றைக்கும் தோற்காது என்ற நம்பிக்கை எனக்கு திடமாக உள்ளது.

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.