கோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்
- IndiaGlitz, [Monday,February 22 2016]
கடந்த ஆண்டு இறுதியில் அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாக கூறப்பட்ட பீப் பாடலில் ஆபாச வார்த்தைகளும், பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல் இருந்ததாகவும் கூறி ஒருசில பெண்கள் அமைப்புகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து நேரில் ஆஜராக வேண்டும் என இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அனிருத் ஏற்கனவே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டார்.
இந்நிலையில் சிம்பு வரும் 24ஆம் தேதிக்குள் கோவை போலீசார் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து இன்று கோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜரானார். அவருடன் அவருடைய வழக்கறிஞர்களும் உடன் வந்திருந்தனர்.
காவல்நிலையத்தில் ஆஜராகிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, "காவல்துறை அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளேன். என் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவேன். இதற்கு மேல் இறைவன் பார்த்துக் கொள்வான்" என்று கூறினார். சிம்பு வருகையை அடுத்து அந்த பகுதியில் பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் குவிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.