காவிரி பிரச்சனையில் நாம் செய்ய வேண்டியது என்ன? சிம்பு அறிக்கை
- IndiaGlitz, [Monday,September 12 2016]
காவிரி நீர் பிரச்சனையால் தமிழகம் மற்றும் கர்நாடக மக்களின் ஒற்றுமைக்கு பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பிரச்சனையை பயன்படுத்தி ஒருசிலர் வேண்டாத வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவ்வாறு வந்த வதந்திகளில் ஒன்றுதான் 'இனிமேல் தன்னுடைய படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய மாட்டேன் என்று சிம்பு சொன்னதாக வந்த வதந்தி. இந்த வதந்திக்கு சிம்பு தரப்பில் இருந்து உடனடியாக சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிம்புவிடம் இருந்து நேரடியாக விளக்க அறிக்கை வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அன்பு நண்பர்களே,
தற்போது நான் தாய்லாந்து நாட்டில், அச்சம் என்பது மடமையடா படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். காவேரி விவகாரம் தொடர்பாக நான் ஏதோ கூறியதாக வந்த செய்திகள் குறித்து எனது நலவிரும்பிகளும், எனது தந்தையும் என்னிடம் கூறினர். இந்தியாவின் பொறுப்புள்ள குடிமகனாக, எனது பங்கும், எனது எல்லைகளும் என்னவென்று எனக்குத் தெரியும். காவேரி விவகாரம் குறித்து எந்த அறிக்கையும் நான் வெளியிடவில்லை. இது இரு மாநிலங்களுக்கும் இடையில் நிலவும் சர்ச்சை. இது கலைஞர்கள் மேடையேறி பிரச்சாரம் செய்வதற்கான விஷயம் அல்ல.
சட்டத்தின் துணையோடு இரு மாநிலத் தலைவர்களும் இதற்கான தீர்வை எட்டுவார்கள். நம்மால் முடிந்தது, நன்றாக பருவமழை இரு மாநிலங்களிலும் அமைதியும் வளமும் செழிக்க வேண்டும் என பிரார்த்திப்பதே. அதே போல, நாம் அண்டை மாநில மக்களாக சுமுகமாக வாழ்ந்துள்ளோம். ஆனால் இந்த விவகாரத்தினால் எக்காரணம் கொண்டும் இரு மாநில மக்களிடையே இருக்கும் உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என விரும்புகிறேன்.
இந்த பிரச்சனையை கூடிய விரைவில் கடப்போம் என நம்புகிறேன்.
இந்த விவாகரம் தொடர்பாக அரசியல் ரீதியில் அறிக்கைகளை விட்டு, இரு மாநிலங்களிலும் அமைதி இல்லாத நிலையை ஏற்படுத்தி, அதன் மூலம் விளம்பரம் தேடும் ஆள் அல்ல நான் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சிம்பு பாங்காங்கில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் இடம்பெறும் 'தள்ளிப்போகாதே' பாடலின் படப்பிடிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.