தாடி வைத்திருந்ததால் வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6.67 லட்சம் இழப்பீடு.
- IndiaGlitz, [Friday,December 06 2019]
தாடி வைத்திருந்த காரணத்திற்காக வேலை கொடுக்க மறுத்த நிறுவனம் ஒன்று, பாதிக்கப்பட்டவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ஆறரை லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் லண்டனில் நிகழ்ந்துள்ளது.
நியூசிலாந்தைச் சேர்ந்த சீக்கியரான ராமன் சேத்தி சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனமான எலிமென்ட்ஸ் பெர்சனல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு நேர்முக தேர்விற்கு சென்றார்.லண்டனில் உள்ள சொகுசு கிளாரிட்ஜ் ஹோட்டலில் பணிபுரிய வாய்ப்பு கேட்டு சென்ற அவரை தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு எடுக்க குறிப்பிட்ட நிறுவனம் மறுத்து விட்டது. இதனை அடுத்து தொடர்ந்து ராமன் சேத்தி லண்டன் வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஓட்டலில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது, பணிக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்க கூடாது என்றோ, தாடி வைத்திருக்க கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்ற வாதத்தை ஏற்றது.மேலும் மத காரணங்களுக்காக ஷேவ் செய்ய முடியாத ஒரு சீக்கியரை ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது குறித்து வாடிக்கையாளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நிறுவனம் அளிக்கவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார்.எனவே ஓட்டல் நிர்வாகம் சீக்கியரான ராம் சேதிக்கு 7,102 பவுண்ட், அதாவது இந்திய மதிப்புபடி 6 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கிய தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்போவதாக ராமன் சேத்தி கூறியுள்ளார்.