'பத்மாவத்' பிரச்சனை குறித்தும் சித்தார்த்தும், சித்தார்த் அபிமன்யூவும் கூறிய கருத்து
- IndiaGlitz, [Thursday,January 25 2018]
தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாஹித் கபூர் நடிப்பில் சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு பின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு ஒருபுறம் ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வந்தபோதிலும் இன்னொருபுரம் இந்த படத்திற்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களும் நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் ஒருசில மதவாத சக்திகள் இந்த படத்திற்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருப்பது சுப்ரீம் கோர்ட் உத்தரவையே கேலிக்குரியாக்குவதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் பல சமூக பிரச்சனைகள் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் ஆக்கபூர்வமான கருத்துக்களை கூறி வரும் நடிகர் சித்தார்த், இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் இந்த படத்தை வெளியிட தடையில்லை என்று கூறிய பின்னரும் ஒரு திரைப்படத்தை முன்வைத்து சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும் சச்சரவுகள் இனிமேல் வரவுள்ள மோசமான நிகழ்வுகளுக்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. யார் இந்த கலகக்காரர்கள். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நிர்வாகம் சீர்கெட்டுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். என்ன நடக்கிறது இங்கே. இது ஜனநாயக ஆட்சியா? அல்லது குண்டர்கள் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் நடிகர் அரவிந்தசாமியும் இதுகுறித்து கூறியபோது, 'சட்டம் ஒழுங்கு கெடும் அளவில் உள்ள மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துங்கள். பொதுமக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அரசு இருந்து என்ன பயன்? இது நிர்வாகம் தோல்வி அடைந்ததை குறிப்பதால் தயவுதாட்சியம் இன்றி ஆட்சியை கலையுங்கள்' என்று கூறியுள்ளார்.