நடிகை ஸ்ரேயா மகளுக்கு “ராதா“ பெயர்…. காரணத்தை கேட்டு அசந்துபோன ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

நடிகை ஸ்ரேயா சரண் தன்னுடைய மகளுக்கு “ராதா“ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்தப் பெயருக்கான விளக்கம் மற்றும் பெயர் வைக்கப்பட்ட பின்னணி குறித்தும் அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் “சிவாஜி“, நடிகர் விக்ரமுடன் “கந்தசாமி“, நடிகர் தனுஷ்ஷுடன் “திருவிளையாடல் ஆரம்பம்“, தளபதி விஜய்யுடன் “அழகிய தமிழ் மகள்“ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

பின்னர் நடிகை ஸ்ரேயா சரண் ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் சினிமாவில் கவனம் செலுத்திவந்த அவர் கொரோனா நேரத்தில் தன்னுடைய கணவருடன் பார்சிலோனாவில் வசித்துவந்தார். மேலும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்ற அவர் அதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா நேரத்தில், தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தையும், 9 மாதக் குழந்தைக்கு தான் தாய் என்பதையும் நடிகை ஸ்ரேயா சரண் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நடிகை ஸ்ரேயாவிற்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இதையடுத்து தனது மகளைப் பற்றி ஊடகத்திடம் பேசிய ஸ்ரேயா, தனது மகளுக்கு “ராதா“ எனப் பெயர்சூட்டியிருப்பதை கூறியதோடு தனக்கு “பெஸ்ட் பிரண்ட்“ எனவும் குறிப்பிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, முதலில் ராதா பிறந்த விஷயத்தை என்னுடைய அம்மாவிடம் சொன்னேன். “அவர் ஓ ராதா ராணி வருகிறாள்“ என்று மகிழ்ச்சிப் பொங்கத் தெரிவித்தார்.

இதைப் பார்த்த என் கணவர்… “ஏன் உன் அம்மா ரஷ்ய மொழியில் குழந்தையை கொஞ்சுகிறார்“ எனக் கேட்டார். காரணம் “ராதா“ என்றால் ரஷ்ய மொழியில் “மகிழ்ச்சி“ என்று அர்த்தமாம். சமஸ்கிருதத்திலும் “ராதா“ என்றால் மகிழ்ச்சி என்றே பொருள். இதையறிந்ததும் குழந்தைக்கு “ராதா“ என்றே பெயர் வைத்துவிட்டேன். இதனால் ஆண்ட்ரி மிகவும் சந்தோஷப்பட்டார்.

பின்பு குழந்தையை சுமந்து பெற்றவள் நீ… எனவே உன்னுடைய பெயரும் இருக்க வேண்டும் எனக்கூறிய ஆண்ட்ரி… குழந்தைக்கு “ராதா சரண் கோஸ்சீவ்“ என்று முழுமையாகப் பெயர் வைத்தார். இப்படி நடிகை ஸ்ரேயா சரண் பகிர்ந்துகொண்ட அனைத்துத் தகவல்களும் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.