ஜாம்பவான் வரிசையில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ்… முந்தைய சாதனை பட்டியல்…
- IndiaGlitz, [Friday,November 26 2021] Sports News
தான் கலந்து கொண்ட முதல் சர்வதேசப் போட்டியிலேயே அசராமல் விளையாடி ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்துள்ளார். இதனால் சர்வதேசப் போட்டியில் சதம் அடிக்கும் 16 ஆவது இந்திய வீரராகவும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்கும் 3 ஆவது சாதனை வீரராகவும் அறியப்படுகிறார்.
இதற்கு முன்பு முதல் சர்வதேசப் போட்டியில் சதம் அடித்த வீரர்களாக சவுரவ் கங்குலி, விரேந்தர் சேவாக், முகமது அசாரூதின், ரெய்னா, ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஸ்ரேயாஸும் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிக்கொண்ட தொடரின் முதல்போட்டி நேற்று கான்பூரில் துவங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கினர். இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கிய நிலையில் மயங்க் அகர்வால் 18 ரன்களிலேயே ஏமாற்றினார். அதையடுத்து புஜாரா 26, ரஹானா 35 என்று மூத்த வீரர்களும் படு சொதப்பலாகவே விளையாடினர். இதனால் இந்திய அணி 145 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களம் இறங்கியவர்தான் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கவனம் ஈர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் நேற்று முதல் முறையாக சர்வதேசப் போட்டியில் விளையாடினார். ஆனால் நிதானமாக விளையாடிய அவர் பவுண்டரிகளை பறக்கவிட்டு நேற்றைய போட்டியில் 75 ரன்களை குவித்திருந்தார். இன்று மீண்டும் களம் இறங்கிய அவர் அசுரத்தனமாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதனால் முதல் சர்வதேசப் போட்டியிலேயே சதம் எடுத்த சாதனை வீரர் என்ற அடையாளத்தை பெற்றார்.
சதத்தைப் பதிவு செய்த நிலையில் அதிரடி காட்டிய விளையாடிய ஸ்ரேயாஸ், சவுத்தி வீசிய பந்தில் அவுட்டானார். இதனால் 171 பந்துகளை சந்தித்த ஸ்ரேயாஸ் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவருக்கு கம்பெனி கொடுத்த ஜடேஜா அரைசதம் அடித்தார். அதேபோல சுப்மன் கில் 52 ரன்களை குவித்த நிலையில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்களை குவித்தது.
தற்போது இந்தியாவிற்கு எதிராக களம் இறங்கியிருக்கும் நியூசிலாந்து அணியினர் விக்கெட் இழப்பின்றி 129 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.