சொல்லி வைத்து அடித்த ஷேன் வார்னே… உயிரிழப்புக்குப் பின் வைரலாகும் வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,March 09 2022] Sports News
லெக் ஸ்பின் பந்துவீச்சால் உலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே. இவர் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இவர் பந்துவீசிய ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் விளையாடிய ஷேன் வார்னே கடந்த 2011 ஆம் ஆண்டு பிக் பேஷ் லீக் போட்டிகளில் கலந்து கொண்டபோது முன்னணி வீரர் பிராண்டன் மெக்கல்லமின் விக்கெட்டை சொல்லி வைத்து எடுத்துள்ளார். அதாவது நியூசிலாந்து அணியில் இடம்பெற்று மெக்கல்லம் விளையாடியபோது அந்தப் போட்டியின் 10 ஆவது ஓவரில் பந்து வீசிக்கொண்டிருந்த ஷேன் வார்னே, “அவர் இன்ஸைட் அவுட் ஷாட் அடிக்க முயற்சித்தார், இப்போது ஸ்வீப் ஷாட் அடிப்பார். எனவே நான் வேகமாகப் பந்து வீசப் போகிறேன்“ என்று போட்டி நடந்து கொண்டிருந்தபோதே கிரிக்கெட் வர்ணனையாளர்களிடம் கூறியிருந்தார்.
அதை வர்ணனையாளர்கள் கவனித்துக் கொண்டிருந்த தருணத்தில் திடீரென மெக்கல்லம் ஸ்வீப் ஷாட் அடிக்க அதை ஷேன் வார்னே தனது வேகப்பந்து வீச்சால் போல்டாக்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வரும் நிலையில் இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் வார்னே கிரிக்கெட்டை எவ்வளவு காதலித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது என மெய்சிலிர்க்கப் பாராட்டி வருகின்றனர்.
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னே இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று வர்ணனையாளராகப் பணியாற்றி வந்த இவர் தனது 52 ஆவது வயதில் கடந்த 4 ஆம் தேதி தாய்லாந்தில் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு உலக ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.