நாளை காய்கறி கடைகள் திறக்கலாம்: அரசின் அறிவிப்பால் கோயம்பேடு வியாபாரிகள் மகிழ்ச்சி!
- IndiaGlitz, [Saturday,May 29 2021]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு ஒரு வாரம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டதாக நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்திருந்தார்.இதனால் ஜூன் 7 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காய்கறி வியாபாரிகளின் கோரிக்கையை அடுத்து நாளை ஒரு நாள் மட்டும் கோயம்பேடு காய்கறி கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை ஞாயிறு அன்று கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள், பூ மார்க்கெட்டில் கடை திறக்கப்படும் என்றும் இந்த கடைகள் பகல் 12 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக ஏற்கனவே வாகனங்கள் மூலம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காய்கறி பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது வாகனங்களில் காய்கறிகள் வாங்க முடியாதவர்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் கோயம்பேடு சந்தை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது