கொரோனாவால் இறந்தவரை ஆற்றில் வீசும் அதிர்ச்சி வீடியோ… தொடரும் சர்ச்சை!

உத்திரப்பிரதேச மாநிலம் ராப்தி ஆற்றங்கரையில் நின்று கொண்டு இரு ஆண்கள் அதுவும் பிபிஇ உடையுடன் இறந்தவர் உடலை ஆற்றில் வீசி எறியும் வீடியோ காட்சி சோஷியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. கடந்த மே 28 ஆம் தேதி வெளியான இந்த வீடியோ கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உ.பி மாநிலத்தின் பால்ராம்பூர் மருத்துவமனையில் கடந்த மே 25 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த மே 28 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். உயிரிழந்த உடலை மருத்துவர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். அந்த உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் ராப்தி ஆற்றில் வீசி உள்ளனர்.

இந்தச் சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில் பல வடமாநிலங்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதிலும் உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் உயிரிழந்தவர்களை எந்த பாதுகாப்பும் இன்றி மக்கள் ஆற்றின் மணலில் புதைத்து வைப்பதும், தண்ணீரில் அப்படியே வீசுவதுமாக இருக்கின்றனர்.

அந்த வகையில் பக்ஸர் ஆற்றில் மட்டும் இதுவரை 71 உடல்கள் வீசப்பட்டன என்றும் பிரயாக்ரஜின் உள்ள கிராமங்களில் இதேபோன்று நூற்றுக்கணக்கான பிணங்கள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதைத்தவிர கங்கை ஆற்றங்கரை ஒட்டியப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் மட்டும், பல ஆயிரக்கணக்கான பிணங்கள் மணலில் புதைக்கப்பட்டு உள்ளன. இப்படி புதைக்கப்பட்ட பிணங்களின் உடல் பாகங்கள் வெளியே தெரிவதுபோன்ற காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின. அதை நாய் போன்ற விலங்குகள் சாப்பிடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடுத்து கங்கை ஆற்றங்கரை அருகே ரோந்து பணிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.