குழந்தை வரத்துக்காக மனித நுரையீரலை வைத்து சடங்கு… மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம்!!!

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக ஒரு தம்பதி சிறுமி ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் நுரையீரலை அகற்றிய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கட்டம்பூர் எனும் பகுதியில் பரசுராம் என்பவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு குழந்தை இல்லை என்பதற்காக மனித நுரையீரலை வைத்து சடங்கு செய்ய வேண்டும் என யாரோ ஒருவர் கூறியதை நம்பி இந்தக் கொடூரச் செயலை செய்திருக்கிறார்.

பரசுராம் இதற்காக சிறுமி ஒருவரைக் கடத்த வேண்டும் என தனது உறவினரான அங்குல் குரல்(20) மற்றும் பீரனிடம்(31) கூறியிருக்கிறார். இதையடுத்து அங்குல் குரல், பீரன் இருவரும் சேர்ந்து 6 வயது சிறுமி ஒருவரை கடத்தி குடிபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ளனர். பின்பு சிறுமியின் உடலில் இருந்து நுரையீரலை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து பரசுராமனிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்தக் கொடூரச் செயல் அனைத்தும் பரசுராமனின் மனைவிக்குத் தெரிந்து இருந்தும் அவர் யாரிடமும் சொல்லாமல் மறைத்து இருக்கிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நுரையீரல் மட்டும் இல்லாமல் உயிரிழந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து விசாரணை செய்த போலீசார் பரசுராமன் மற்றும் அவரது மனைவி, அங்குல் குரல், பீரன் ஆகியோரை கைது செய்துள்ளனர். குழந்தை வரம் வேண்டும் என்பதற்காக ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது, அவரை கொலை செய்தது, நுரையீரலை மட்டும் பிரித்து எடுத்தது போன்ற அடுக்கடுக்கான தகவல்கள் உத்திரப்பிரதேசத்தில் கடும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.