இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை பாட மாட்டேன். எஸ்பிபி
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜாவும், பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களும் எந்த அளவுக்கு நெருக்கமானவர்கள் என்பது திரையுலகம் அறிந்ததே. ஆனால் சமீபகாலமாக இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக உறுதி செய்யாத தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.
இந்த நிலையில் தற்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த இசை நிகழ்ச்சியில் சின்னக்குயில்' சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த பாடல்களை எஸ்பிபி அமெரிக்காவில் உள்ள இசைநிகழ்ச்சியில் பாடக்கூடாது என்றும் அவ்வாறு பாடினால் காப்புரிமை சட்டத்தின்பை நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸ் குறித்து பாடகர் எஸ்பிபி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.
சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.
என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். 'எஸ்.பி.பி.50' என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்ன மாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.
இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்."
இவ்வாறு எஸ்பிபி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments