10 ஆண்டுகால தனிமைச் சிறை? தங்களைத் தாங்களே பூட்டிக் கொண்ட விசித்திர சம்பவம்!!!
- IndiaGlitz, [Tuesday,December 29 2020]
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 படித்த பட்டதாரி இளைஞர்கள் அவர்களின் படித்த சகோதரி என 3 பேருமாக சேர்ந்து கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பூட்டிய வீட்டிற்குள்ளே சுருண்டு கிடந்து உள்ளனர். அவர்களை Saathi seva group எனும் அமைப்பு மீட்டு இருக்கிறது.
ஒரு அறைக்குள் தங்களை தாங்களே பூட்டிக்கொண்ட சகோதர சகோதரிகள் அதே அறைக்குள்ளேயே மலம் கழித்து அதே அறையில் பழைய சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டு தலையில் காடு போன்று முடியை வளர்த்துக் கொண்டு இருந்த நிலையில் அவர்களை Saathi seva group சமீபத்தில் மீட்டு இருக்கிறது. இவர்கள் கடந்த 1986 ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தக் கொடுமையான சம்பவத்திற்குக் காரணம் மீட்கப்பட்ட உடன்பிறப்புகளின் தாய் கடந்த 1986 ஆம் ஆண்டு இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மூத்தவர் அம்ரீஷ் மேத்தா (42) இவர் பி.ஏ. எல்.எல்.பி படித்தவர். அடுத்து மேக்னா மேத்தா (39) இவர் எம்.ஏ சைக்காலஜி படித்தவர். அடுத்து பவேஷ் (30) பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆகிய 3 பேரும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என முடிவு எடுத்தாகக் கூறப்படுகிறது.
வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என முடிவெடுத்த அந்த உடன் பிறப்புகள் ஒரு கட்டத்தில் அங்குள்ள ஒரு அறைக்குள்ளேயே தங்களை சிறை வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்களின் தந்தை நவீன்பாய் மேத்தா என்பவர்தான் இவர்களை கவனித்து வருகிறார். பூட்டிய அறைக்கு வெளியே இவர் சாப்பாட்டை வைத்த பின்பு அந்த உடன்பிறப்புகள் அதை எடுத்து உயிர்வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விசித்திர நிகழ்வினால் பாதிக்கப்பட்ட உடன்பிறப்புகள் தற்போது மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.