எஸ்.ஏ.சி கட்சியில் இருந்து விலகிவிட்டேன்: விஜய் தாயார் ஷோபா!

தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் நேற்று விஜய்யின் பெயரில் திடீரென அரசியல் கட்சியை தொடங்குவதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து தனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சிக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தன்னுடைய ரசிகர்கள் அதில் சேர வேண்டாம் என்றும் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியில் அவரே செயலாளராகவும், விஜய்யின் தாயார் ஷோபா பொருளாளராகவும் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை என்றும் அக்கட்சியிலிருந்து விலகி விட்டேன் என்றும் விஜய்யின் தாயார் ஷோபா தெரிவித்துள்ளார். அசோசியேசன் தொடங்குவதாக என்னிடம் எஸ்.ஏ.சி கையெழுத்து பெற்றார் என்றும், கட்சி தொடங்குவதற்காக இரண்டாவது முறை கையெழுத்து கேட்டபோது நான் கையெழுத்து போடவில்லை என்றும் ஷோபா தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் பற்றி எதுவும் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சியிடம் விஜய் கூறி இருந்ததாக தெரிவித்த ஷோபா, எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் மேலும் விஜய் தனது தந்தையிடம் பேசுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஷோபாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.